இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ (Love & War) மாறியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைப் படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வெளியாகியுள்ள இரண்டு போஸ்டர்களும் விக்கி கௌஷல் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் முற்றிலும் மாறுபட்ட இருவேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதில் ஒரு போஸ்டரில் சிகரெட் மற்றும் லைட்டருடன், தீவிரமான பார்வையுடன் தோன்றும் அவர் மிகவும் கம்பீரமாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறார். அதற்கு நேர்மாறாக மற்றொரு போஸ்டரில், நீச்சல் குளத்தில் ஒரு மலர்க்கொத்துடன் இருக்கும் அவர், முதல் போஸ்டரில் பார்த்த தீவிரமான தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவராகக் காட்சியளிக்கிறார்.
முதன்முறையாக சஞ்சய் லீலா பன்சாலியின் திரையுலகில் ஒரு கதாநாயகனாக விக்கி கௌஷல் களமிறங்குவது படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அவரது அபாரமான நடிப்புத் திறன் இந்தப் படத்தில் எவ்வாறு வெளிப்படப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முன்னணி நட்சத்திரங்களின் இந்த அசத்தலான போஸ்டர்கள் வெளியானதைத் தொடர்ந்து, இப்படத்தை வெள்ளித்திரையில் காணும் ஆவல் ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களைத் தொடர்ந்து தன் கதைக்குள் ஈர்க்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் தனித்துவமான கதை சொல்லும் திறனுக்கு இந்த போஸ்டர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த ‘லவ் & வார்’ திரைப்படம், வரும் 2027 ஜனவரி 21 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.












