கொரோனாவுக்கு பலியான ‘அசுரன்’ வில்லன்நடிகர்!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலைக்கு தினசரி பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இதில் திரைப்பிரபலங்களும் அதிகளவில் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் நிதிஷ் வீரா.காலா திரைப்படத்தில் இவர் ரஜினிகாந்த் மகனாக நடித்ததால் மிகவும் புகழ் அடைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக நடிகர் நிதிஷ் வீரா ( வயது 45) , சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் . மதுரை புதூர் பகுதியை சேர்ந்த அவருக்கு மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியான செய்தி வந்த சில மணிநேரங்களில் நடிகர் நிதிஷின் கொரோனா மரணமும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.