பேய் பங்களா என தெரியாமலேயே இரவில் படுத்து உறங்கிய ஹீரோ!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார். இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ‘வானத்தை போல’ சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக சிட்டி முதல் பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார்
ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இரட்டைக்குதிரை சவாரி செய்து வரும் தமன்குமார் கூறியதாவது.”ஆம்.. ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.. இன்னொரு பக்கம் சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து நான் நடித்துவரும் வானத்தை போல சீரியல், நூறாவது எபிசோடை தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது.சினிமாவை எடுத்துகொண்டால் நான் நடித்துள்ள கண்மணி பாப்பா ஹாரர் படமாக உருவாகியுள்ளது.
ஒரு சிறுமியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடிகர் கொட்டாச்சியின் மகள் பேபி மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. குறிப்பாக கொடைக்காணல் பகுதியில் காட்டுப்பகுதியில் உள்ள பெரிய பங்களா ஒன்றில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.. பெரும்பாலான நாட்கள் அந்த பங்களாவிலேயே இரவில் தங்கினோம்.. ஆனால், அதுவே ஒரு பேய் பங்களா என்றும் சிலர் அங்கே தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள் என்கிற விபரமும் சென்னை வந்த பின்னர் தான் தெரிந்தது..
மேலும் அந்த பங்களாவில் படப்பிடிப்பு நடத்த சென்ற படக்குழுவினர் பலரும், தொடர்ந்து நடத்த முடியாமல் பாதியிலேயே திரும்பி வந்துள்ளனர்.. ஆனால் எந்த சிக்கலும் இன்றி அந்த பேய் பங்களாவில் முதல்முறையாக முழு படப்பிடிப்பையும் முடித்து வந்தவர்கள் எங்கள் படக்குழுவினர் தான், அந்தப்படத்தின் படப்பிடிப்பு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.என்கிறார்.