உள்ளாட்சித்தேர்தலில் ரஜினி போட்டி? பரபரப்பு தகவல்கள்!
நடிகர் ரஜினிகாந்த் நாளை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருமாறு தனது மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் . விரைவில் தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் மன்றத்தினரை போட்டியிட வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் நடித்து வந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்படிப்புகளை முடித்த ரஜினிகாந்த், சிறுநீரக பரிசோதனை தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.அங்கு பிரபல மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மருத்துவ பரிசோதனை முடித்து, கடந்த ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த கையோடு, ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக,தமிழகத்தில் 2021 சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். முன்னதாக ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவ்வப்போது மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
2021 தேர்தல் நெருங்கும் வேளையில், கரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி, அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என கடந்த டிசம்பரில் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்தும் விரிவாக பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால், மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.