கமல் அரசியலுக்கு முழுக்கா? மக்கள் நீதி மய்யம் பரபரப்பு அறிக்கை!
வணக்கம்,
மாநில மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான செயல்பாடுகள், சமூக முன்னேற்றத்திற்கான முன்னுதாரண நடவடிக்கைகள், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை மய்யக் கட்சியின் மூலம் பூர்த்திசெய்தல்… என மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதலே நாள்தோறும் தன் சேவையை செய்வனே செய்துவருவதை அச்சு, ஒலி மற்றும் ஒளி ஊடகங்கள் மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு, முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மய்யத் தலைவர் அவர்கள் சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, சில ஊடகங்கள் `தீவிர அரசியலில் இருந்து கமல் ஓய்வு பெற முடிவு?’, `கமல் கட்சிக்கு கிளைமாக்ஸ்..?’ போன்ற கருத்துப் பிழையான கட்டுரைகளை வெளியிட்டு, மக்களைத் தவிக்கவிடுகின்றன. இதற்கான பின்னணி என்னவென்று தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளை அந்த ஊடகங்களே செய்கின்றனவா அல்லது வேறு எவராவது பின்னணியில் இருந்து செயல்படுகின்றனரா என்பதும் தெரியவில்லை.
எப்படி இருப்பினும், மக்களுக்காக நீதி பரிபாலையத்துடன் மய்யமாக இருந்து சேவையாற்றிவரும் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், தான் உயிரோடு இருக்கும் வரை அரசியலிலும், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கும் என்பதை ஏற்கெனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், உண்மைகளை அலசி ஆராய்ந்து அச்சில் ஏற்றவேண்டிய சில ஊடகங்கள் மாறாகச் செயல்படுவதை எண்ணி, மக்கள் நீதி மய்யம் பெருத்த வருத்தம்கொள்கிறது.
தலைவர் `நம்மவர்’ திரு.கமல் ஹாசன் அவர்கள், கட்சி தொடங்கியபோதே தன் வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றிடுவேன் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் வகுத்த அந்தக் கொள்கையின்படிதான் இப்போதும் செயல்பட்டும் வருகிறார். தன்னுடைய திட்டங்கள் மூலமாகவும் யோசனைகள் மூலமாகவும் மக்களுக்கு சேவையாற்றிவரும் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், எந்த சூழ்நிலையிலும் அரசியலைவிட்டு விலக எண்ணியதேயில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
அன்புக்குரிய ஊடகங்களும் இனியாவது தவறான தகவல்களுக்கு இடமளிக்காமல், ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களிடம் நிவர்த்தி செய்துகொண்டு செய்திகளை வெளியிடும்படி அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
நன்றி…வணக்கம்!
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு), துணைத் தலைவர். மக்கள்நீதிமய்யம்.