கனவுகள் சாத்தியமாகும்போது கஷ்டப்படவும் தயாராக இருக்கனும் ! -ஹிப்ஹாப் தமிழா ஆதி

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அஷ்வின் ராம் இயக்கத்தில்  ஹிப்ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இரட்டைவேடத்தில் நடித்துள்ள புதிய படம்,  “அன்பறிவு”

இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.இவர்களுடன்  நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜனவரி 7 ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில்..நடிகர் ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது. “இந்தப்படத்தில் காமெடியை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு இப்படம் இருக்கும்.

முதன் முறையாக இது எனக்கு பெரிய பட்ஜெட் படம். நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நெப்போலியன் சார், விதார்த் சார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஒரு கிளாசிக் கதை அதை மீண்டும் குடும்பங்களோடு கொண்டாடும் படமாக உருவாக்கியுள்ளோம். ஒரு குடும்ப படத்தை மியூசிக்கலாக உருவாக்க நினைத்து தான் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். 

எம்ஜிஆர் படங்கள் முதல் ஏகப்பட்ட க்ளாசிக் படங்கள் இந்த கதையில் வந்திருக்கிறது. அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கிறோம். கமர்ஷியலை தாண்டி கிளாசிக்கான படைப்பாக இப்படம் இருக்கும். வேகமாக ஓடிட்டு இருக்கிற உலகத்துல, அறிவோட இருக்குறதுனா அன்பாகவும்  இருக்க வேண்டும் என்பதை தான் இப்படம் சொல்கிறது.

விதார்த் சார் ஒரு அட்டகாசமான ரோல் செய்திருக்கிறார். வழக்கமான சினிமாவில் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக செய்திருக்கிறோம். இரட்டை வேடம் செய்தது சவாலாக  இருந்தது.  நமக்கான கனவுகள் சாத்தியமாகும்போது கஷ்டப்படவும் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் இருப்பதே எனது கனவு தான் அதில் இரட்டை வேடம் நடிப்பது என்பது  வரம் தான். 5 படங்களுக்கு செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.இவ்வாறு அவர் பேசினார்