நாங்க சூரியன்மாதிரி .. ஒரே ஒரு இளையராஜா,ஒரேஒரு பாரதிராஜாதான்! – படவிழாவில் இளையராஜா பேச்சு!!

பிரபாகரன் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் கானா வினோதன், குப்பன் கணேசன் இருவரும் இணைந்து தயாரித்து வரும் புதிய படம் காதல் செய், இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் கே கணேசன்.

இதில் புதுமுகம் சுபாஷ் சந்திர போஸ் கதாநாயகனாகவும் நேகா கதாநாயகியாகவும் நடிக்க,இவர்களுடன் மனோபாலா லொள்ளு சபா சுவாமிநாதன் லொள்ளு சபா மனோகர் கணேசன் வைத்தியநாதன் அனுபமா அர்ச்சனா சிங் லிங்கேஸ்வரன் பத்மா பிரவீன் சீனிவாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இளையராஜா,பாரதிராஜா,பி,வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில்  இசைஞானி இளையராஜா பேசியதாவது,
“எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளையராஜாக்களே…” என்றவர் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, “ஏன்யா, காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான். ஏன்யா, சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்துல வரல? ஒண்ணுதான் வரும். அது என்ன தென்னமரமா, ஆயிரம் வைக்கறதுக்கு… ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரம் பொறக்கறதுக்கு… பொறந்து வளரணும்யா… ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ங்கற குறள் மாதிரிதான்.

செல்வம் படைச்சவனா இருக்கறது வேறு. ஆனா, ரொம்ப தெளிந்த அறிவோடு இருப்பது வேறு. திருவேறுனா இன்னொரு அர்த்தமும் இருக்கு. நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்டா… ஆனா, தெள்ளியராக இருப்பது ரொம்ப கஷ்டம். இந்தப் படத்தை எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள்.

ஒரு படத்தை எடுக்க எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம். படத்தைப் பார்க்கறவங்களுக்குத்தான் கஷ்டம் வரக்கூடாது. ‘காதல் செய்’னு டைட்டில் வச்சிட்டீங்க. காதல் செய்ய பார்க்கறேன்.

என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனா, எதைக் காதலிக்கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளியனா இருக்கேன்” இவ்வாறு அவர் பேசினார்.