சண்டைக்காட்சியில் விபரீதம்: அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு முறிந்தது!
பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், பிரபாஸ் தீபிகா படுகோனே,ஆகியோருடன் இணைந்து தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது. தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது..
இந்த ஆக்சன் காட்சிகளை பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்கள் அனபறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்து வருகின்றனர் .இந்நிலையில், இப்படத்தின் சண்டைக்காட்சியின் போது நடிகர் அமிதாப் பச்சன் காயம் அடைந்துள்ளார் இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஐதராபாத்தில், ‘ப்ராஜெக்ட் கே ‘படப்பிடிப்பில், சண்டைக் காட்சியின் போது, எனக்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பின் குருத்தெலும்பில் முறிவு ஏற்பட்டது மேலும் தசைநார் கிழிந்துள்ளது. அதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஐத்ராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் சி.டி ஸ்கேன் எடுத்த பிறகு அவர்களை கன்சல்ட் செய்து விமானம் மூலம் வீடு திரும்பினேன். சில நாட்களில் இயல்பு நிலை ஏற்படும். வலிக்கு சில மருந்துகளை பயன்படுத்துகிறேன்.
எனவே செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் இடைநிறுத்தப்பட்டு, நான் குணமடையும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.நான் ஜல்சாவில் (அமிதாப் பச்சன் வீடு) ஓய்வெடுக்கிறேன் மற்றும் அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் மொபைல் மூலம் தொடர்பில் இருக்கிறேன். இன்று மாலை ஜல்சா கேட்டில் உள்ள நலம் விரும்பிகளை என்னால் சந்திக்க முடியாமல் போய்விடும்.. அதனால் வரவேண்டாம்.. வர விரும்புபவர்களுக்கு உங்களால் இந்த தகவலை முடிந்தவரை தெரிவிக்கவும். மற்ற அனைத்தும் நலம்..” என பதிவிட்டுள்ளார்.