“ஒருவேளை (மதிய) உணவு ” நடிகர் விஜயின் அடுத்த அதிரடி!
நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்கிற பட்டி மன்றம் தான் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் இதற்கு வலு சேர்க்கும் வகையிலேயே அவரது மன்றத்தின் செயல் பாடுகள் அமைந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு மற்ற கட்சியினர் ஆச்சரியப்படுமளவிற்கு வெற்றிபெற்றுள்ளனர்.அரசியலில் இறங்க முதல் படியாக டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.மேலும் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை விஜய் ரசிகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அடுத்த மாதம் 22-ம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு இணைந்து ஒரு பெரிய மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.”தளபதி” அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல: மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “பட்டினி தினத்தை” முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.