பாட்டியின் தண்டட்டியை அபேஸ் பண்ண ஆசைப்பட்ட பசுபதி!
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.இதில்,கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது, “தண்டட்டி படத்தின் ஆரம்ப புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையை தூங்குவார்கள். ஆனால் எனக்கு விநாயகருக்கு பதிலாக வெங்கடாஜலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.. ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும்.
இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் பசுபதி பேசும்போது, “சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்த கதை கேட்டேன். கேட்கும்போதே ‘க்யூட்’ ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்கு பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை.ரோகிணியும் நானும் அதிக காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படியான வசனம் எதுவும் இல்லை. படப்பிடிப்பில் என்ன ஒரு ஹைலைட் என்றால் நாம் டயலாக்கை மறந்து விட்டு விட்டோம் என்றால், உடனே இந்த பாட்டிகளே யாரையும் எதிர்பார்க்காமல் கட் சொல்லிடுவாங்க. அவர்களுக்கு பயந்து கொண்டு வசனங்களை சரியாக பேசி நடிக்க வேண்டி இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.