மாரிசெல்வராஜுக்கு, உதயநிதி ‘மினி கூப்பர்’ கார் பரிசு!

தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரிசெல்வராஜ். கர்ணன் படம் மூலமாக நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தவர் அடுத்தாக இவரது இயக்கத்தில் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில், மாமன்னன் படம் கடந்த வியாழக்கிழமை ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்நிலையில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இயக்குனர் மாரி செல்வராஜூக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.இக்காரை கதாநாயகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜூற்கு வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள்.

உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மாமன்னன் வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயன்ட் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” என உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த டிவிட்டர் பதிவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜும் தனது டுவிட்டர் பக்கத்தில் “மாமன்னன் கதை எந்த புள்ளியில் தொடங்கியதோ சரியாக அந்த புள்ளியில் நின்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் கரம் பற்றி பெரும் நெகழ்ச்சியோடு சொல்கிறேன். அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி சார்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.