’16 வயதினிலே’ எஸ்.ஏ ராஜ்கண்ணு மரணம்! கமல், பாரதிராஜா இரங்கல்!!
தமிழ்த்திரையுலகில் கடந்த 1977-ல் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் பாரதிராஜாவை இயக்குனராக அறிமுகப்படுத்திய பழம்பெரும் படததயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு (வயது 77). இவர் கன்னி பருவத்திலே, , கிழக்கே போகும் ரயில்,பொண்ணு புடிச்சிருக்கு உட்பட பல படங்களை தயாரித்தவர். கமல்ஹாசனின் மகாநதி படத்தின் தயாரிப்பாளரும் இவரே.
சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில்,கடந்த மே மாதம் வீட்டின் குளியல் அறையில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தவறி விழுந்தார். இதில் அவரது கை, காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில்,நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் அவரது இறுதிச்சடங்கு இன்று காலை நடந்தது.
ராஜ்கண்ணு மறைவு குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜ்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,”16 வயதினிலே”திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி எஸ்.ஏ..ராஜ்கண்ணுவின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமய்யாக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,”ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்..