தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம்! இன்று காலை நடந்தது!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது நடிகர் சங்க அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

 இப்பொதுக்குழு கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார்  கடந்த 2022-23ம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை துணைத்தலைவர் கருணாஸ் சமர்ப்பித்தார். எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தியும், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து பொதுச்செயலாளர் விஷாலும் உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, சி.பி.ராஜ், லதா சேதுபதி, விக்னேஷ் சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், சீனிவாச ரெட்டி, ரத்தினசபாபதி, பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளிமுத்து உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் நடிகர்,நடிகைகள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 கூட்டத்தொடக்கத்தில்  மறைந்த நடிகர்கள் டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, நடிகை அங்காடி தெரு சித்து உள்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் சங்க வளர்ச்சி பணிகள் கட்டிட பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செயற்குழு கூட்டம் காலை 9 மணிக்கு நடந்தது. இதில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றியுரை ஆற்றினார். இப்பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கலை நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.