பிரியங்கா உபேந்திராவின் நடிப்பில் உருவான “கேப்சர்”!



கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் மனைவி பிரியங்கா உபேந்திரா  தனித்துவமாக நடித்துள்ள “கேப்சர்” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இது சிசிடிவி பார்வையில் இருந்து முழுமையாக படமாக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமாகும்.  ஒரே லென்ஸில் படமாக்கப்பட்ட உலகின் மிக அரிதான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இயக்குனர்  லோஹித்.எச் நாவல் முறைகளில் புதுமையான கருத்துகளுடன் திரைப்படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர். “கேப்சர்” படம் மம்மி மற்றும் தேவகி படங்களுக்கு பிறகு பிரியங்காவுடன்  இயக்குனரின் மூன்றாவது படம் ஆகும்.

ராதிகா குமாரசாமி  வழங்கும் இப்படத்தை ரவிராஜ் தனது ஸ்ரீ துர்காபரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் மூலமும்  ஷமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனமும்  இணைந்து   தயாரிக்கின்றனர்.

கேப்சர் படம் முழுக்க முழுக்க கோவாவில் 30 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  நடைபெற்று வரும் இப்படம்  ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.  

இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் பிரியங்கா உபேந்திராவின் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன்   காணப்பட்டுள்ளார். அதேசமயம் அவரைச் சுற்றி ஏராளமான சிசிடிவி கேமராக்கள் உள்ளன.  ஒரு காகம் கேமராவில் அமர்ந்திருக்கிறது. போஸ்டரில் கைகளையும்  பார்க்கலாம்.  பிரியங்காவின் இந்த புன்னகையும் சந்தேகமும் நிறைந்த முகம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி இந்தப் படம் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும், பரபரப்பையும் தூண்டியுள்ளது.

 ‘தகரு’ பட புகழ் மன்விதா காமத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில்  நடிக்கிறார். மேலும் மாஸ்டர் கனிஷ்ராஜ் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.  பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரவிச்சந்திரன் படத்தொகுப்பைக் கையாள்கிறார்.