திரிஷா,குஷ்பு மீது ரூ. 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு! மன்சூர் அலிகான் தொடர்ந்தார் !!
நடிகை திரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து இருந்தார். இவ்விவகாரத்தில் மன்சூர் அலிகானை திரையுலகினர் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர்.
நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கமும் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். மன்சூர் அலிகானும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, தான் பேசிய கருத்தால் திரிஷாவின் மனம் புண்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனால் மனம் வருந்தி திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என தான் வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார். திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னிப்பதாக சமூக வலைதளத்தில் சூசகமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகை திரிஷா, தன்னை கண்டித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முழு வீடியோவையும் பார்க்காமல் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை அன்று, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.