ஜமா . ( விமர்சனம்.) இயல்பான படம். கவருமா ?
அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது ‘தெருக்கூத்து.’ நாடகத்தின் முந்தைய வடிவம் என்றாலும் பிழையில்லை . அந்த கலையிலும் உள்ளடி வேலை உண்டு என்பதை இயல்புடன் சொல்கிறது ‘ஜமா’. துணிவுடன் எழுதி இயக்கி நடித்திருக்கிறார் பாரி இளவழகன் . வாழ்த்துகள் தமிழரே.!தெருக்கூத்து நடத்தும் சிறிய குழுவுக்கு ‘ஜமா ‘ எனப் பெயராம் .
கதைக்களம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். தெருக்கூத்து குழுவின் செல்வாக்கான வாத்தியார் சேத்தன் . சரியான தேர்வு. பெண்ணாக கூத்துக்கட்டும் பாரி இளவழகனுக்கு வாத்தியாராகி அர்ஜுனன் வேஷம் கட்டவேண்டும் என்பது ஆசை. லட்சியம் என்றும் சொல்லலாம். சேத்தனை மானசீக தந்தையாகவே கருதுகிறவர்.ஆனால் அவரது ஆசைக்கு வேட்டு வைப்பவர் சேத்தன் தான்.”பெண் வேஷம் கட்டுகிறவர் வாத்தியார் ஆக முடியாது” என்று முட்டுக்கட்டை.
பாரியின் ஆசை நிறைவேறியதா ,என்னெவெல்லாம் நடக்கிறது,முட்டுக்கட்டை எப்படி தகர்க்கப்படுகிறது என்பது மீதிக் கதை.!
கதையின் நாயகன் பாரி இளவழகன். இயல்பான நடிப்பு. ஸ்திரீ பார்ட் கட்டுகிறவர்களை நகலெடுத்த உடல் மொழி . கதையை விட்டு வெளியேறாமல் அச்சு அசலாகி விட்டார். மறுமுறையும் வாழ்த்துகள்.
நாயகியாக அம்மு அபிராமி. . காதலன், கணவனாக கைப் பற்றுவான் என்கிற நம்பிக்கை புதை குழியில் விழுந்து விடுமோ என்கிற அச்சத்துடன் வாழ்கிற கேரக்டர். சிறப்பான நடிப்பு.
வாத்தியார் சேத்தன். கேரக்டர் ஆர்டிஸ்ட் . ஒரு மனிதன் எப்படியெல்லாம் முரண்படுகிறான் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். தமிழ்த் திரை இவரை பயன் படுத்திக் கொள்ள வில்லையே ! ஆதங்கம் இருக்கிறது.
கோபாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு தெருக்கூத்துக் கலையின் நீள அகலங்களை அசல் படுத்தியிருக்கிறது. தெருக்கூத்துக்கலையை நேர்த்தியாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.அக்கலைஞர்களுக்குள் நடக்கும் மோதல்களையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆதி கலைக்கு ஜீவன் இசை தான். சங்கீதம் தெரியாவிட்டாலும் பாமரன் தலையாட்டி ரசிப்பான். இசைஞானியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். பாடலும் பின்னணி இசையும் கதைக்கு உயிராகி இருக்கிறது.
கமர்சியலுக்காக இயல்பை இரையாக்காமல் மண்ணின் மணம் கமழ ஜமா படமாகி இருக்கிறது.
நிர்வாணப் பெருநகரில் வேட்டி கட்டிய ‘ஜமா’ வுக்கு வரவேற்பு கிட்டுமா ?
பார்க்கலாம்.
—-தேவிமணி