‘கொட்டுக்காளி’: கதாநாயகனாக எனக்கு நம்பிக்கையை குடுத்துருக்கு !-நடிகர் சூரி.
‘விடுதலை’, ‘கருடன்’ படங்களைத் தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்துள்ள 3 வது படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் படம் முழுவதும் வசனம் பேசாத ‘பேய்’ பிடித்த பெண் கதாபாத்திரத்தில் நடித்தது ஏன்? என்பது குறித்து நடிகை அன்னா பென் கூறியதாவது, “இயக்குநர் வினோத்ராஜ் என்னிடம் கதை சொல்லும் போதே நான் நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இது ரொம்ப புதிய முயற்சியாக, கலாச்சாரம் சம்மந்தமான கதைக்களமாக, மதுரை மண் சார்ந்த மொழி என குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை பற்றி இப்படம் பேசினாலும், இது சர்வதேச அளவிலான கதை என்பதால் இப்படத்தை எந்த மொழியில் எடுத்தாலும் இது எளிதாக மக்களை சென்றடையும். இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுக்கும், தனித்துவமும் முக்கியத்துவமும் இருக்கிறது. நான் நடித்திருக்கும் மீனா கதாபாத்திரம் பிடிவாதம் பிடித்த பெண் என்றாலும், அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்த விதம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். படம் முழுவதும் நான் பேசவில்லை என்றாலும், எனது உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலமே எனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இதற்கான உடல்மொழி மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது எப்படி என்பது தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது, அதை நான் சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
படம் குறித்து நடிகர் சூரி கூறுகையில், “’ஒரு நடிகராக எனக்கு விடுதலை’ மற்றும் ‘கருடன்’ படங்கள் எப்படி பெயர் வாங்கி கொடுத்ததோ அதை விட பெரிய பெயரை ‘கொட்டுக்காளி’ பெற்று தரும். அப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படம் இது. இந்த படத்தை பார்த்துவிட்டு தம்பி சிவகார்த்திகேயன் எனக்கு அதிகாலை 5 மணியளவில் போன் செய்தார், அவர் சொன்ன வார்த்தைகளை நான் இங்கு சொன்னால் அதிகமாக இருக்கும். ஆனால், அவர் சொன்னது “உன்னை பார்த்தா எனக்கு பயமாக இருக்குன்னே. நானும் என்னமோ ஏதோ என பயந்து போனேன். அப்புறமா கொஞ்சம் கேப் விட்டு, ஒரு நடிகராக விடுதலை படத்தை விட இந்த படம் ஒன்னை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு போகும் ” நானும் ரெண்டு மூணு தடவை இந்த படத்தை நான் பார்த்துட்டேன்.உங்கள் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது, என்றார்.
அவருடன் அவரது மனைவி, அம்மா ஆகியோரும் படம் பார்த்தார்கள், அவர்களும் என் நடிப்பும், படமும் சிறப்பாக இருப்பதாக சொன்னதாக சொன்னார். இயக்குநர் அமைதியாக இருந்துக்கொண்டு இப்படி ஒரு படம் செய்துவிட்டாரே, என்றும் பாராட்டினார்.”காமெடி நடிகராக இருந்த நீங்கள் இன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் நாயகனாகியிருப்பது
குறித்து கேட்கிறார்கள். இந்த இடத்தை நான் நிச்சயமா எதிர்பார்க்கல . விடுதலை படம் கூட நான் எதிர்பார்க்காதது தான். காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாகி ’விடுதலை’, ’கருடன்’ போன்ற படங்களில் நடித்துவிட்டு, ’கொட்டுக்காளி’ போன்ற படத்தில் நடித்திருப்பது, அதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்றிருப்பது எல்லாம் சினிமாவில் நான் நேர்மையாக பயணித்ததால் கிடைத்தது என்று நினைக்கிறேன். இது அனைத்தும் எனக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு, ஒரு நடிகராக பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை குடுத்துருக்கு .” என்கிறார்.