குடிகாரர்களுக்கு எதிரான படம்,’சாலா’!
இயக்குனர் பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. மணிபால் ‘சாலா’ படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.பீப்பிள் மீடியா ஃபேக்டரி,பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேசன், ‘மெட்ராஸ்’ சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.டி. மணிபால் கூறுகையில்,
”தமிழ்நாட்டில் இன்றைக்கு பெரும் பங்கு வகிப்பது மதுதான். 20 வருஷங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெர்டிலிட்டி சென்டர் என்பதே கிடையவே கிடையாது. ஆனால், இன்றைக்கு தெருவுக்கு தெரு இருக்கிறது. காரணம் மதுவினால் ஆண்மைத்தன்மை குறைய ஆரம்பித்ததால்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கு. மேலும் வன்முறையை உருவாக்குகிற இடமாக மதுக்கடைகள் இருக்கிறது.வட சென்னையின் முக்கிய பகுதியான ராயபுரத்தில் அமைந்துள்ள ‘பார்வதி பார்’ ஒரு மதுபானக் கூடத்தை கைப்பற்ற சக்தி வாய்ந்த 2 கோஷ்டிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இதனால் அந்த பார் இழுத்து மூடப்படுகிறது.
இந்நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த பார் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது. இதையடுத்து மீண்டும் அந்த பாரை கைப்பற்ற 2 கோஷ்டிகளும் வரிந்து காட்டுகிறது. கடும் மோதலும் ஏற்படுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பள்ளிக்கூட ஆசிரியையும், சமூக சேவகியுமான புனிதா என்கிற இளம் பெண் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதலில் ஜெயிப்பது யார் என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.