“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
இந்நிகழ்வினில், நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…தம்பி சுசி தான் இந்த மேடைக்கு வரக்காரணம். நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசி தான். அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு தந்து, என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது, நான் நன்றாக இருக்கக் காரணம் சுசிதான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்கு தொழில் சுத்தமாகத் தெரியும், அவர் மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது. இந்தப்படத்தில் எனக்குத் தெரிந்த பலர் நடித்துள்ளனர். எனக்குத் தெரியாத பல புதுமுகங்களும் நடித்துள்ளனர். அனைவருக்கும் இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். இந்த மேடை மிக அன்பாக ஆதரவாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் “பாட்டில் ராதா” பட மேடையில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தமிழ்த் திரைத்துறை உலகம் முழுக்க மதிக்கக் கூடியது. அதை ஆபாசமாக்கக் கூடாது. அவரை பல மேடைகளில் பார்த்து வருகிறேன். தமிழ் ஆளுமைகள் நிறைந்த மேடையில், மிக அநாகரிகமாகப் பேசியது மிக வருத்தமாக இருந்தது. இயக்குநர் பாலாவை, ஐயா இளையராஜா அவர்களை வாடா போடா என்கிறார். யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச? மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும். இந்த மேடை போல் அன்பாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது….
என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசி சார் தான். அவருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். எதற்காகவும் கோபப்பட மாட்டார், மிகவும் அன்பாக இருப்பார். எப்போதும் ஒரே மாதிரி இருப்பார். அவரது இந்தப்படம் டிரெய்லர் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. புதிய ஹீரோ அறிமுகமாகியுள்ளார் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் எழில் பேசியதாவது…
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களும் அத்தனை அற்புதமாக இருந்தது. இத்தனை நடிகர்களை வைத்து, எப்படி இதை எடுத்தார்? என ஆச்சரியமாக உள்ளது. 2கே கிட்ஸை வைத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்கிற ஆவலும் உள்ளது. இன்றைய இளைஞர்களின் உலகம் புதிதாக இருக்கிறது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அதைப் புரிந்து கொண்டு, அவர்கள் உலகத்திற்குள் நுழைந்து, அடுத்த கட்டத்திற்கு ஒரு படத்தைச் செய்துள்ளார் சுசீந்திரன். நடிகர்கள் எல்லோரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப் பிரமாதமாக உள்ளது. அத்தனை விஷயமும் இப்படத்திற்கு மிக சரியாக அமைந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…
சுசீந்திரன் சாருடன் இது எனது மூன்றாவது படம், ஆனால் எல்லோரும் இங்கு 5வது படம், 6வது படம் என்கிறார்கள், இத்தனை பேருக்கு வாய்ப்பும், வாழ்க்கையும் தந்த சுசி சாருக்கு நன்றி. “கென்னடி கிளப்” படத்தில் எனக்கு நல்ல பாடல்கள் தந்த இமான் சார், இந்த படத்திலும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். படம் மிக அழகான படமாக, அருமையான படைப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது..,
City light pictures க்கு இந்தப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். சுசி சாரின் நல்ல மனதிற்கும், புதிய முயற்சிக்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். சுசி சாருடன் இது எனக்கு 9வது படம். ஒரு இயக்குநருடன் நான் தொடர்ந்து படங்கள் செய்வேன் ஆனால் அது ஒரே மாதிரி படமாகத்தான் இருக்கும், ஆனால் சுசி சார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் அசத்துவார். இந்தப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக அழகாகக் காட்டியுள்ளார். எல்லோரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும். இந்த தலைமுறை இளைஞர்களிடம் உரையாடி, அவர்களின் உலகைக் காட்சிப்படுத்தியுள்ளார். கேமரா மிக உயர்தரமாகக் காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. விஷுவல் நன்றாக இருக்கும் போது தான், இசையும் நன்றாக வரும். பாடல்கள் மிக இளமையாக வந்துள்ளது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கு என் நன்றி. இப்படத்தின் இசை முதல் முறையாக என் ஆடியோ லேபிள் நிறுவனம் மூலம் வருகிறது மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்த்து விநியோகிக்க வந்துள்ள தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஜெகவீர் மீனாட்சி மிக நன்றாக நடித்துள்ளனர். அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். பாலா அசால்ட்டாக நடித்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள், எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் மிக அருமையாக இன்றைய தலைமுறை கதையைப் படமாக்கியுள்ளார். முதலிலேயே இந்த படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், சுசி சார் இந்த படத்தில் என்ன செய்கிறார்? என ஆச்சரியமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து, இந்த படம் பார்க்க முடியுமா? என்று கேட்டார். பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்றைய கால இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள். எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் உலகம் எப்படி இருக்கிறது, என்பதை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் சுசி சார். மிகச்சிறந்த இயக்குநர், நாம் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இணைய வேண்டியது மிஸ் ஆகிவிட்டது ஆனால் இதில் மிஸ் ஆகிவிடக்கூடாது என உடனே நான் செய்கிறேன் என்றேன். படம் பார்த்து இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார், என் கருத்துக்களுக்கு மதிப்பு தந்தார். இயக்குநர்கள் என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்?, என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால், செய்! என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல், நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படத்தில் அனைத்து நடிகர்களுமே மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இமான் சார், மிக இளமையான பாடல்கள் தந்துள்ளார். தயாரிப்பாளர் மிகச் சிறப்பாகப் படத்தைத் தயாரித்துள்ளார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த இளமையான டீம் சொல்ல வரும் கருத்து, அனைவருக்கும் பிடிக்கும். அருள் தாஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், ஒரு மேடையில் நாகரீகம் மீறி, வாடா, போடா எனக் கொச்சை வார்த்தைகளில் பேசக்கூடாது, மிஷ்கின் என் நண்பர் என்றாலும், அதைக் கண்டித்த அருள்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேடைகளில் எப்போதும் அடுத்தவரைக் காயப்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், பாஸிடிவாக பேச வேண்டும். எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.