போலீஸ் அதிகாரியான சத்யராஜ் மிகவும் நேர்மையானவர்.இவரது நேர்மை காரணமாக சிறுவயதிலேயே தன் தாயையும், தங்கையையும் இழந்து தவிக்கிறார் மகன் ராகவா லாரன்ஸ். இதனால்,மனம் வெறுப்படைந்து தன் அப்பாவைவிட்டுபிரிந்து சென்று விடுகிறார் ராகவாலாரன்ஸ், சில வருடங்களுக்கு பின்பு பெரியவனாகி துணை போலீஸ்கமிஷனராக திரும்புகிறார். அப்பாவுக்கு நேர்மாறாக லஞ்சம், அடிதடி, மாமூல் என கணிசமாக கல்லா கட்டும் ராகவாலாரன்ஸ், பிரபலதாதா அஷுடேஷ் ராணாவின் அத்தனை கிரிமினல் வேலைகளுக்கும் பக்க பலமாகவும் இருக்கிறார். இந்நிலையில்,அஷுடேஷின் தம்பியான வம்சி கிருஷ்ணாவும், அவரின் நண்பர்களும் ராகவா லாரன்ஸ் மிகவும் பாசம் வைத்து, மனதளவில் தங்கச்சியாக ஏற்ற அப்பாவி பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள். அவரின் மரணம் லாரன்ஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அதன்பிறகு ராகவா லாரன்ஸ் இவர்களை அழிக்க எடுக்கும் அவதாரங்களே படத்தின் மீதிக்கதை. நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன பழைய கதை.சரி,திரைகதையாவது சற்று விறுவிறுப்பாக, சுவாரசியமாக இருக்கிறதா? என்றால் அதுவும், வசனமும் படு மொக்கையான சமாச்சாரங்களாகி விடுவதால் அட, போங்கப்பா! இதுக்கு தானா இத்தனை பில்டப்பு கொடுத்தீங்க! என்றாகி விடுகிறது. ராகவா லாரன்ஸ் ஒட்டு மொத்தமாக தன் தோளில் படத்தை சுமந்திருக்கிறார். பலன் ‘பூஜ்யம்’ தான்.அதே சமயம் நடனத்திலும்,சண்டைக்காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். இவரின் பாடி லாங்குவேஜ் பிளஸ் டயலாக் டெலிவரி மிக பிரமாதம்.நிக்கி கல்ராணி கிளாமர் சற்று தூக்கலாக பாடல்களுக்கு ஆட்டம்போடுவதோடு சரி. சத்யராஜ்,வில்லன் அஷுடேஷ் ராணா வம்சி கிருஷ்ணா. தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். கோவை சரளா, சதீஷ் ‘காமெடி’ என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் சகிக்க முடியவில்லை. மொத்தத்தில் பட்டாசாக வெடிக்கும் என எதிர்பார்த்தால் புஸ்……..என்ற சத்தம் மட்டுமே! இதுல டைட்டில் கார்டில் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு……..!












