‘வருணன்’ – (விமர்சனம்.) கானல்!

‘யாக்கை பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில், கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்து, ஜெயவேல் முருகன் இயக்கியிருக்கும் திரைப்படம், வருணன். இதில், ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, ஹரிப்பிரியா, சங்கர் நாக் விஜயன், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். போபோ சசி இசையமைத்திருக்கிறார்.

வட சென்னையில் உள்ள ராயபுரத்தில், குடிதண்ணீர் தொழிற்சாலை ஒன்றினை நடத்தி வரும் அய்யாவு ( ராதாரவி) , ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற வணிக முத்திரையுடன் தண்ணீர் கேனை சப்ளை செய்து வருகிறார்.‌ இதே பகுதியில், இவருக்கு போட்டியாக ஜான் வாட்டர் சப்ளை என்ற நிறுவனத்தை ஜான் ( சரண் ராஜ்) நடத்தி வருகிறார். இதில் ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற நிறுவனத்தில் கதையின் நாயகனான தில்லை ( துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) பணியாற்றுகிறார். இவர் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் கேனை கொண்டு செல்லும்போது, சிட்டு( கேப்ரியல்லா)  என்ற இளம் பெண் மீது காதல் ஏற்படுகிறது. இவனுடைய நண்பனான மருது ( பிரியதர்ஷன்), அக்னி ( ஹரி ப்ரியா) என்ற பெண்ணை காதலிக்கிறார்.

ஜான் வாட்டர் சப்ளை நிறுவனத்தை நடத்தி வரும் ஜானின் மனைவி ராணி( மகேஸ்வரி)யும், அவரது தம்பி டப்பா( சங்கர் நாக் விஜயன்)வும் ‘சுண்டக்கஞ்சி’ என்ற தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்பனை செய்கிறார்கள். இதனால் காவல்துறை அதிகாரியான மதுரை வீரன் ( ஜீவா ரவி) இவர்களை கண்காணிக்க தொடங்குகிறார்.

இந்த தருணத்தில் மருதுவின் மனைவியான அக்னிக்கும், டப்பாவின் சகோதரியான ராணிக்கும் இடையே கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சிறிய அளவிலான சண்டை ஏற்படுகிறது. இது பெரிதாக மாறி விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.

வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதை. படத்தை திரையரங்கத்தில் பார்க்கும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையிலான காட்சிகள் அடுத்தடுத்து வருவதால் உற்சாகத்திற்கு பதிலாக சோர்வு தான் ஏற்படுகிறது. இருந்தாலும் ரசிகர்களை தன்னுடைய நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கட்டிப்போடுகிறார் ஒளிப்பதிவாளர்.

பாடல்கள் வடசென்னை மக்களின் பாரம்பரிய இசையான கானா பாடலாக இருப்பதால் ஓரளவு ரசிக்க முடிகிறது.

ராதா ரவி தன்னுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதலை தருகிறார்.

டிவி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா இந்த படத்தில் அக்னி எனும் வேடத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் வழக்கமான கதாநாயகனுக்குரிய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

வருணன் – கானல்!