‘பறந்து போ’ –  திரைப்பட விமர்சனம்

மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரயான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் , ஸ்ரீஜா ரவி ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் செவன் சிஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்- ஜியோ ஹாட்ஸ்டார் -ஜி கே எஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ் – ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வெளியாகி இருக்கும் படம் ‘ பறந்து போ ‘ ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் நெடிய கரவொலி ஆதரவை பெற்று கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

பொதுவாக தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவை சொல்லும் திரைப்படங்கள் இயக்குநரின் பார்வையில் விவரிக்கப்பட்டிருக்கும் அல்லது தந்தையின் பார்வையில் விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் முதன்முறையாக மகன் அதிலும் எட்டு வயது சிறுவனின் பார்வையில் பெற்றோர்களுக்கான… பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உறவை கலகலப்பாக பேசியிருக்கும் படம் ‘பறந்து போ’.

சென்னையில் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கோகுல் – குளோரி. இவர்களுக்கு அன்பு என்றொரு மகன். அவனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நினைத்து அவன் கேட்பதை எல்லாம் வாங்கித் தருகிறார்கள். தரமான தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.  ஆனாலும் அன்பு மகிழ்ச்சியாக இல்லை. பெற்றோர்களும், வழிகாட்டுதலும் இல்லாத காரணத்தினால்.. இன்றைய தலைமுறையினர் தங்களுக்குத் தேவையான விசயத்தை கூகுள் மூலம் தெரிந்து கொள்வதை போல்.. எட்டு வயது மகனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள என்ன தேவை? என்பதை அன்புவின் அம்மா கூகுளில் தேடுகிறார். அவர்களுக்கு கிடைத்த விடையை விட அன்பு ஒரு புதிய பாதையை தேர்வு செய்கிறான்.

பள்ளி விடுமுறை நாட்களில், அநேக நேரம் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அன்பு, என்னை எங்காவது என்னை வெளியில் அழைத்துச் செல்லுங்கள் என அடம் பிடிக்கிறான். அம்மா, குடும்பத்தின் நிதி சிக்கல் காரணமாக  கோவையில் நடந்து வரும் கண்காட்சி ஒன்றில் புடவைக்கடை நடத்துகிறார். அப்பா தொழிலை கவனிக்க.. அன்புக்கு பள்ளியில் அரையாண்டு விடுமுறை விட… தனிமையில் இருக்கும் அன்பு அதை வெறுத்து வெளியில் அழைத்துச் செல் என்று அடம் பிடிக்கிறான். அந்தத் தருணத்தில் மாத தவணை செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. கோகுலை கடன்காரன் விரட்ட… வேறு வழியில்லாமல் திட்டமிடாத திடீர் சாலை பயணத்தை கோகுலும், அன்புவும் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்தில் அவர்களுக்கு கிடைக்கும் எதிர்பாராத தூய கலப்படமில்லாத அனுபவம் தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

அன்புவின் சேட்டைகள் சற்று ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளை நினைவு படுத்தினாலும் அவன் அப்பாவான கோகுல் – அதனை கையாள்வது புதிய பாணியாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. மகனை பாராட்டிக் கொண்டே இருக்கும் கோகுலின் அணுகுமுறையை படம் பார்க்கும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களிடமும் எதிர்பார்க்கிறார்கள். இது இயக்குநர் ராமின் முதல் வெற்றி என குறிப்பிடலாம்.

கோகுல் தன் பள்ளி பருவத்து தோழியான (அஞ்சலி) வனிதாவை சந்திக்கும் தருணங்கள் அழகானவை.

அதேபோல், அன்பு தன் பள்ளி தோழி வீட்டுக்கு செல்வதும், விளையாடுவதும் ரசனையானவை.

நியூக்ளியர் ஃபேமிலியாக மாறிவிட்ட இன்றைய சமூகத்தில், மெத்த படித்த தம்பதிகள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் கடந்த தலைமுறையின் ஆலோசனையை கேட்பதில்லை என்பதை குறையாக சொல்லாமல்… அதற்கான மாற்று உபாயம் என்ன என்பதை, இயக்குநர் ராம் தன் அனுபவத்தின் ஊடாக விவரித்து இருப்பதால் இந்த படத்தை ரசிக்கவும் முடிகிறது. வரவேற்கவும் முடிகிறது. ஆதரிக்கவும் முடிகிறது.

சின்னதும், பெரிதுமாக 19 பாடல்களை பாடல்கள் இடம் பிடித்திருந்தாலும் அவை எளிதாக புரிந்து கொள்ள முடிவதால் ரசிக்க முடிகிறது. இதுபோன்ற பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை சுவாரசியமாக பார்ப்பதற்கு பின்னணி இசை முதன்மையான காரணமாகவும் திகழ்கிறது. அதனால் பின்னணி இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கும், பாடல்களுக்கு இசையமைத்த சந்தோஷ் தயாநிதிக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

பாடல்கள் பின்னணி இசை மட்டுமல்ல இயற்கையின் அழகியலை கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தையும் பாராட்டலாம்.

‘கற்றது தமிழ்’ படத்தினை பயணத்தை மையமாக கொண்டு ராம் திரையுலகில் இயக்குநராக 2007 ஆம் ஆண்டில் அறிமுகமாகிய இருந்தாலும்.. அந்தப் பயணத்தில் கந்தக நெடி அதிகம். இந்த திரைப்படத்திலும் பயணத்தை பிரதானமாக கொண்டிருந்தாலும் கதைக்கான நோக்கம் வித்தியாசம் என்பதாலும்,  இயக்குநர் ராம் தன்னுடைய 15 ஆண்டுக்கு மேலான திரை உலகப் பயணத்தில் கற்ற விசயத்தை நகைச்சுவையாக விவரித்திருப்பது இதன் பலம்.

ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருப்பது கோகுல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவாவின் இயல்பான நடிப்பு. படம் முழுதும் தன் மகனுக்காக  ஓடுவதும், இடையிடையே தன் டிரேட் மார்க்கான ஒன் லைன் பஞ்ச் டயலாக்கை பேசுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் தண்ணீருக்காக தவித்து அதன் பிறகு மனைவியின் கைப்பையில் தண்ணீர் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவது ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

குளோரியாயாக நடித்திருக்கும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி அழகு. அற்புதமாக நடித்திருக்கிறார். குறிப்பாக தன் தங்கையை காணும் காட்சி மற்றும் பணப்பெட்டியை தன்னுடன் பணிபுரிந்த பணிப்பெண் எடுத்துக் கொண்டு இருப்பாரோ என சந்தேகப்படும் காட்சியையும் குறிப்பிடலாம். இவரது காட்சிகள் படத்தின் பலம்.

அன்புவாக நடித்திருக்கும் மாஸ்டர் மிதுன் ரயான் – வனிதாவின் மகனுடன் விளையாடும் காட்சியையும், வாத்துகளை மேய்க்கும் நபரிடம் டைனோசரை விவரிக்கும் காட்சியிலும்,  சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு காட்சிகள் மட்டும் அல்ல படம் நெடுக அவனுடைய தோற்றம் பேச்சு உடல் மொழி ரசிக்க வைக்கிறது.

இந்த குடும்பத்தை கடந்து பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி ,விஜய் யேசுதாஸ் ஆகியோர்களும் திரைக்கதையின் சுவாரசியத்திற்கு தங்கள் பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

ராம் தன் இயல்பான படைப்பாளுமையை தொலைத்து , கண்டறிந்த புதிய பாதையில் பயணித்து படைத்திருக்கும் ‘பறந்து போ’ அவருக்கு பல விருதுகளை பெற்றுத் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு புகை பிடிக்கும் பெற்றோர்கள் அதை கைவிட்டால் …அதுவே இப்படத்தில் மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிடலாம்.

‘பறந்து போ’ – இன்றைய தலைமுறையினரின் உளவியல் ஆரோக்கியத்திற்கான கழுகு பார்வை.