தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து
தலைவர் விஷால் பேசியதாவது :
வெற்றி அறிவிப்பு வந்த இரவே செயல்பாடுகளில் இறங்கிவிட்டோம். வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. தயாரிப்பாளர்கள் குடும்பத்தோடு வர வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார்.
தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும். தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று ஒரு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்! என்றார்.