‘தணல்’ – விமர்சனம்!

அதர்வா முரளி, அஷ்வின் ககுமானு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களுடன் லாவண்யா திரிபாதி , தரணி,ஷாரா, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், ரவீந்தர மாதவா.
சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், காவலர்களாக அதர்வாவும் அவரது இரண்டு நண்பர்களும் புதிதாக வேலைக்குச்சேர செல்கின்றனர். அப்போது, இவர்களைப் போலவே மேலும் மூன்று பேர் வேலைக்குச் சேர்வதற்காக இன்ஸ்பெக்டரின் வருகையை எதிர் நோக்கி உள்ளனர். இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் அந்த ஆறு பேரையும் ரோந்து செல்ல கட்டளையிடுகிறார். அவர்கள் ரோந்து செல்லும் வழியில், சாக்கடைக் குழிக்குக்குள் இருந்து, சந்தேக்த்திற்குரிய ஒருவன் வெளியே வருகிறான். அப்போது அவனை விசாரிக்க, இவர்கள் முற்படும் போது, ஒரு கைவிடப்பட்ட குடியிருப்புப் பகுதிக்குள் அவன் ஓடி மறைகிறான். சந்தேகத்திற்கு இடமான அந்தப்பகுதியில் இவர்கள் ஆறு பேரும் தேடுகின்றனர். அங்கு திடீரென வரும் அஷ்வின் ககுமானு, அந்த ஆறு பேரில் ஒருவரின் தலையை துண்டிக்கிறார். பெரும் அதிர்ச்சிக்குள்ளான இவர்கள் ஆளுக்கொரு புறம் ஓடுகின்றனர். எவ்வளவோ முயற்சித்தும் வெளியே செல்ல முடியவில்லை! இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘தணல்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை!
அதர்வா, அவரது கதாபாத்திரத்திற்கேற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலுமே சிறப்பாக, காட்சிகளுக்கேற்றபடி உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி கிளப்பியிருக்கிறார்.
அஷ்வின் ககுமானு, பார்த்தவுடன் மிரளும் தோற்றத்தில், போலீசை பழிவாங்கும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவரது தோற்றமும் நடிப்பும் அவரது கதாபாத்திரத்தினை உயர்த்திப்பிடித்திருக்கிறது.
அதர்வாவின் காதலியாக நாயகி, லாவண்யா திரிபாதி அழகான தோற்றம். சில காட்சிகள் தான் என்றாலும் கவனிக்கவைத்து விடுகிறார்.
அதர்வாவின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா, அவர் கொடுக்கும் ஐடியாக்கள் சிரிக்க வைக்கின்றன.
படம் ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குப் பிறகு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இடைவேளை வரை வேகமாக நகர்கிறது. அதன் பிறகு அஷ்வின் ககுமானுவின் ஃப்ளாஷ் பேக்கில் சற்றுத்தொய்வு ஏற்படுகிறது. மற்றபடி, க்ளைமாக்ஸ் வரையிலும் சீட்டின் நுனியில் உட்கார வைத்து விடுகிறது.
காவல் துறையினர் அனைவரையும் விரோதி போல் காண்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது. யாரோ சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதில் நியாயமும் இல்லை.
போலீஸ்காரர்களை கொல்வதற்காக, அஷ்வின் ககுமானு சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் படியில்லை! இயக்குநர் ரவீந்தர மாதவாவின் சமூகம் பற்றிய புரிதலும், பார்வையும் அபத்தமானது. க்ளைமாக்ஸில், சிறுவனின் கையில் கத்தியைக் கொடுத்திருப்பது அயோக்கியத்தனமானது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையிலும் குறை இல்லை.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு, படத்தின் பலம்.
தணல் – விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!