ரோபோ சங்கரின் இறுதிசடங்கில் திரண்ட திரையுலகம்!

மதுரையைச் சேர்ந்தவரான ரோபோ சங்கர் (வயது 46) முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். உடற்கட்டு பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட இவர், இதற்கான போட்டிகளிலும் பங்கெடுத்து வந்தார் . மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று “மிஸ்டர் மதுரை”, “மிஸ்டர் தமிழ்நாடு” ஆகிய பட்டங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சினிமா மீது உள்ள ஆர்வம் காரணமாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிமிக்கிரி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். மேலும் உடலில் பெயிண்ட் பூசிக் கொண்டு ரோபோ போன்று நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் சங்கர் என்ற பெயருடன் ‘ரோபோ’ என்ற பட்டம் இணைந்து கொண்டது.பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு கற்க கசடற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும், விஜய் சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் தனுஷூடன் இவர் நடித்த மாரி திரைப்படமும் வெள்ளித் திரையில், நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் “வாயை மூடி பேசவும்”, “மாரி”, “புலி”, “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்”, “வேலைக்காரன்”, “ஹீரோ” உள்ளிட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்தார். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். பிரியங்கா டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். இந்திரஜா விஜய்யுடன் ‘பிகில்’ படத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.இதையடுத்து பூரண உடல் நலத்தோடு தான் இருப்பதை உணர்த்தும் விதமாக தொடங்கிய இடத்திலிருந்தே கடந்த 2023 ஆம் ஆண்டு 25 ஆண்டுகள் கழித்து மதுரையில் நடைபெற்ற 37வது ஆண்டு ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தனது பழைய வலிமையை நினைவூட்டும் வகையில் உடல் பாவனைகளைச் செய்துகாட்டினார்.தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகள்,திரைப்பட விழாக்களுக்கு பழைய உற்சாகத்தோடு வந்த ரோபோ சங்கர்.பிஸியாக படங்களிலும் நடித்து வந்தார் இந்நிலையில்,நேற்று முன்தினம் படப்பிடிப்பில் பங்கேற்ற ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. குடல் இரத்தப்போக்கு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.பின்னர் அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்
ரோபோ சங்கரின்.மறைவுச் செய்தி தமிழ் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் டி ராஜேந்தர், சிம்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் .கமல்ஹாசன் ராதாரவி,சிவகார்த்திகேயன்,தனுஷ்,விஜய் ஆண்டனி,பாக்யராஜ் பாடலாசிரியர் சினேகன் மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து ரோபோ சங்கரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு,அவரது உடல் தகனம் இன்று மாலை 4.30 மணியளவில் வளசரவாக்கம் மின்மயானத்தில் நடந்தது.