‘சக்தித் திருமகன்’! – (விமர்சனம்) நிகழ்கால அரசியல் அவலங்கள்!

சக்தித் திருமகன், விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 25 வது திரைப்படம். ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், அருண் பிரபு.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், ‘காதல் ஓவியம்’ படத்தின் கதாநாயகன் ‘சுனில் கிருபளானி’ வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் , வாகை. சந்திரசேகர், செல்முருகன், திருப்தி ரவீந்திரா, கிரிஷ் ஹாசன், ஷோபா விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெயருக்கு தொழிலதிபராக காட்டிக்கொள்ளும், இந்திய மற்றும் சர்வதேச அளவில், அரசியல்வாதிகளை இயக்கிவரும் சாணக்கியர், சுனில் கிருபளானி. இஅவரிடம் எடுபிடியாக இருப்பவர் விஜய் ஆண்டனி. சுனில் கிருபளானிக்கு அதிகம் தெரியாமல், அரசின் அச்சாணியாக விளங்கும் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுக்கும் புரோக்கராக இருந்து வருகிறார், விஜய் ஆண்டனி. எந்தத்துறையில், எந்த வேலை என்றாலும், தனது சாதூரியத்தால் கச்சிதமாக செய்து கொடுப்பவர். மத்திய, மாநில அரசில் இருப்பவர்களுக்கும், ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அவர்களது அனைத்து தரப்பு வேலைகளையும், பணத்தை பத்திரமாக முதலீடு செய்வது வரை, கமிஷன் பெற்றுக்கொண்டு செய்து வருகிறார். அவர் செய்யும் ஒரு வேலை, சுனில் கிருபளானிக்கு பெரும் பாதிப்பினை உருவாக்குகிறது. அதனால், விஜய் ஆண்டனியை ஒழித்துக்கட்ட திட்டமிடுகிறார். அது நடந்த்தா, இல்லையா? என்ன ஆனது என்பதே ‘சக்தித் திருமகன்’.
நிகழ்கால அரசியலில் நடக்கும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் அழகாக தொகுத்து கொடுத்துள்ளார், எழுதி இயக்கியிருக்கும் அருண்பிரபு. மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நடக்கும் அரசியல் பேரங்கள். அதிகார துஷ்பிரயோகம். கட்டுப்படுத்தப்படாத விலைவாசி, அரசியலில் சாமியார்களின் ஆதிக்கம். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் கொடுக்கும் லஞ்சம் என அனைத்தையும், பல நிகழ்கால அரசியல்வாதிகளுடன் ஒத்துப்போகும் அளவில் படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், மக்களை அதிர்ச்சியும் ஆச்சர்யப்படவும் வைக்கிறது.
பால், எண்ணெய், பருப்பு முதலான அத்தியாவசியப் பொருட்களுக்கு சாமானிய மக்கள் செலுத்தி வரும் ஜி எஸ் டி. கோடிக்கணக்கான கடன் தள்ளுபடியால், கொழுத்துப்பெருக்கும் கார்ப்பொரேட் மற்றும் பெரும் முதலாளிகளின் கொள்ளை லாபம். இவைகளை நேரடியாக நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தாற் போல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதி படு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது. அனால் இரண்டாம் பாதியில் சற்றுத் தடுமாறுகிறது. இருந்தாலும், மொத்தப்படத்தினையும் சீட் நுனியிலிருந்து கொண்டு பார்ப்பதுபோல் காட்சியமைத்திருப்பது படத்திற்கான பலம். வரப்போகின்ற தேர்தல்களில் இந்தப்படத்தின் தாக்கமும் இருக்கும்.
விஜய் ஆண்டனியின் தோரணைக்கேற்ப, கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது. கிட்டு என்ற கதாபாத்திரத்தில், தன்னை கச்சிதமாக பொருத்திக்கொண்டுள்ளார். சூழ்நிலைக்கேற்ப, தன்னுடைய புத்திசாலித்தனத்தால் காரியங்களை சாதிக்கும் போது அவரது முக பாவனைகள், அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிருபளானி, ‘அபயங்கர்’ என்ற கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்திப்போகிறார். அதிகார மையத்தை ஆட்டுவிக்கும், அவரது திமிர்பிடித்த உடல்மொழியும் பேச்சும் சூப்பர்!
நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திராவுக்கு, பெரிதாக காட்சிகளில்லை. இப்படத்தில் அவர் நடித்ததில் அவருக்கோ, கதைக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை.
வாகை. சந்திரசேகர், செல்முருகன், திருப்தி ரவீந்திரா, கிரிஷ் ஹாசன், ஷோபா விஸ்வநாத் உள்ளிட்டோரது நடிப்பு ஓகே.
ஒளிப்பதிவாளார் ஷெல்லி ஆர் காலிஸ்ட்டின் ஒளிப்பதிவும்,விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களை திரையோடு ஒன்றினைய வைக்கிறது.
நிகழ்கால அரசியல் அவலங்களை, பரபரப்பான திரைக்கதை மூலம் சிந்திக்க வைத்திருக்கிறார், இயக்குநர் அருண் பிரபு. அதோடு விஜய் ஆண்டனிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில், அவரது 25 வது படமான ‘சக்தித் திருமகன்’ அமைந்துள்ளது.