‘தண்டகாரண்யம்’ – விமர்சனம்!

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தினை இயக்கிய அதியன் ஆதிரை, தண்டகாரண்யம் திரைப்படத்தை, எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தினை சாய் தேவானந்த், சாய் வெங்கடேசன், பா ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் தினேஷ், கலையரசன் இருவரும் குக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவ்ர்களுடன் ஷபீர் கல்லரக்கல், பால சரவணன், ரித்விகா, வின்ஷூ சாம், அருள்தாஸ், வேட்டை முத்துக்குமார், யுவன் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பாடல்களை உமாதேவி, தனிக்கொடி இருவரும் எழுதியிருக்கிறார்கள். ஶ்ரீ கிருஷ் நடனம் அமைத்திருக்கிறார். ஸ்டன்னர் சாம், A.S.சுதேஷ்குமார், PC ஸ்டண்ட்ஸ் ஆகிய மூவரும் சண்டைப் பயிற்சியினை மேற்கொண்டுள்ளனர்.
‘தண்ட காரண்யம்’ என்பது இந்தியாவில் நக்சல்கள் அதிகம் இருக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியாகும். ஆயுதங்களுடன் தாமாக முன்வந்து சரணடையும் நக்சலைட்டுகள், சமூகத்தில் அனைத்து தரப்பினருடன் இணைந்து வாழ்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள், இன்றுவரை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு மறுவாழ்வு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில், பழங்குடி இனத்தைச்சேர்ந்த தினேஷ், தனது தம்பி கலையரசன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கலையரசன் தற்காலிக வனக்காவலராக பணியாற்றி வருகிறார். எப்படியாவது நிரந்தர பணியைப் பெற்று குடும்பத்தின் ஆசையையும், தனது காதலி வின்சு சாமையும் கரம்பிடிக்கத் துடிக்கிறார். இந்நிலையில், வனக்காவல் அதிகாரி செய்யும் சட்டவிரோத செயல்கள், தினேஷ் மூலமாக போலீஸூக்கு தெரியவர, கலையரசனின் தற்காலிக பணியும் பறிபோகிறது.
அதன்பிறகு, நக்சலைட்டுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உருவாக்கப்பட்ட சிறப்புப் படை பிரிவில் சேரும் வாய்ப்பு, கலையரசனுக்கு கிடைக்கிறது. பயிற்சி முடித்த ஒரு வருடத்தில் பணி நிச்சயம் என்ற நிலையில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவருடன் பயிற்சி பெற்ற ஷபீர் கல்லரக்ககல், ராணுவ அதிகாரிகளால், அரசியல் லாபத்திற்காக ‘நக்சலைட்’ என அடையாளப் படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார். இது கலையரசனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு, ராணூவ அதிகாரிகளால், கலையரசனையும் ‘நக்சலைட்’ என அடையாளப்படுத்தப்பட்டு கொலை செய்ய திட்டமிடபடுவது பற்றி அவருக்கு தெரியவருகிறது. இதன்பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.
புதுமையான கதைக்களத்துடன், ஒரு உண்மை சம்பவத்தினை பதை பதைப்புடன் சொல்லியிருக்கிறார், இயக்குநர் அதியன் ஆதிரை. தினேஷ், கலையரசன் இருவருடைய கதாபாத்திர வடிவமைப்பும், அவர்களிடம் அந்தக் கதாபாத்திரத்திற்கான சரியான நடிப்பினை வரவழைத்ததும் சூப்பர். .
தினேஷ் பழங்குடியினராக மிகச்சரியான நடிப்பினை கொடுத்துள்ளார். அருள் தாசையும், முத்துக்குமாரையும் வேட்டையாடும் காட்சியில்சூப்பர். தினேஷின், பாவனைகள் அசரவைக்கிறது. துப்பாக்கியைப் பிடித்து சுடும் காட்சி, சூப்பர். இந்தப்படத்தில் மிகச்சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்.
கலையரசன், காதலியை விட்டுப்பிரிந்த சூழலில், கடுமையான பயிற்சியை மேற்கொள்ளும் போதும், அடுத்ததாக, தன் உயிர் போகப்போகிறது. என அஞ்சியபடியே தப்பிக்க வழி தேடும்போதும் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
மற்றபடி ஷபீர் கல்லரக்கல், பால சரவணன், ரித்விகா, வின்ஷூ சாம், அருள்தாஸ், வேட்டை முத்துக்குமார், யுவன் மயில்சாமி உள்ளிட்டவர்களும், அவ்ர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
இயக்குநர் அதியன் ஆதிரை, பார்வையாளர்களின் கவனம் வேறு திசையில் செல்லாதவாறு திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.