ஸ்ருதிஹாசன் பாடிய ‘கன்னக்குழிக்காரா’ ! வரவேற்பு வைரலாகிவிட்டது.!!

கலைப்புலி தாணு  தயாரிப்பு, ஹாலிவுட் பாணியில் படம் எடுக்க ஆசைப்படுகிற மிஸ்கினின் இயக்கம் ,எப்படியும் நடிக்க முடியும்  என்று கேரக்டராகவே  மாறிவிடும் மக்கள்செல்வன் விஜய சேதுபதி,நடிப்பில் உருவாகிய  டிரெய்ன்  படப் பாடலான ‘கன்னக்குழிக்காரா ‘பாடல் வைரல் ஆகி வருகிறது. பாடியிருப்பவர்  காந்தக் குரல் அழகி ஸ்ருதிஹாசன் ,கலைஞானியின் மகள். கவர்ச்சியான குரலில் உச்சம் தொட்டு பாடியிருக்கிறார் ,முறுக்கேறுகிறது உடல் !

 “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று  வருகிறது.

இந்தப்  பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு என அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.

விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான வருடலைத் தருகிறது . குறிப்பாக, பாடலின் வரிகளில் இருக்கும் மயக்கம் , உணர்வுகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் வழியாக மேலும்  ஆழமாக மனதில் பதிகின்றது.

இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சம் , இயக்குநர் மிஷ்கினே  இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.

 “கன்னக்குழிக்காரா”  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசைத் தளங்களில் முன்னணி  வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது  ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. டிரெய்ன் எப்போது வரப்போகிறது.? முன் பதிவு விரைவில்!