
ஆஞ்சநேயா புரொடக்ஷன் & ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் திரைப்படம், தி பெட். இதில், ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், மணிபாரதி. இத்திரைப்படம், வெளியாவதற்கு சுமார் நான்கு வருடங்கள் ஆகியிருக்கிறது.
ஸ்ரீகாந்த் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு இளைஞன். இவருடன் பணிபுரியும் நண்பர்களான பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் உள்ளிட்ட நால்வரும் சேர்ந்து, வாரந்தோறும் விடுமுறையை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து கொண்டாடி வருகின்றனர். அப்படியான ஒரு நாளில், நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஊட்டிக்கு செல்ல முடிவெடுக்கின்றனர். விடுமுறையை குதூகலமாக கொண்டாட, கூடவே, பாலியல் தொழிலாளியான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கின்றனர்.
ஊட்டியை வந்தடைந்தவுடன் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கேவை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவரின் நண்பர்கள், சிருஷ்டி டாங்கேவை அனுபவிக்க துடிக்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது நடக்காமல் போகிறது. இந்நிலையில், உடனிருக்கும் ஒரு நண்பரும், சிருஷ்டி டாங்கேவும் காணாமல் போகிறார்கள். மற்ற நண்பர்கள் காணாமல் போனவர்களை தேடி வரும் சூழலில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விஜய், அவர்களை கைது செய்து விசாரிக்கிறார். காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? என்பது தான், ‘தி பெட்’ படத்தின் கதை.
ஊட்டி ரிசார்ட்டில் இருக்கும் ஒரு பெட், கதை சொல்வது போல் காட்சிகள் விரிகின்றன. ஒரு விறுவிறுப்பான ரொமேன்டிக், க்ரைம் ஸ்டோரிக்கு என்ன தேவையோ, அது கதையில் இருக்கிறது. ஆனால், அது திரைக்கதையாக முற்றிலும் வடிவம் பெறவில்லை. ஶ்ரீகாந்தின் கதாபாத்திரம் குழப்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையை நேர்த்தியுடன் வடிவமைத்திருந்தால், மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.
வேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.
கிறிஸ்டி கதாபாத்திரத்தில், பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே, ஆபாசமின்றி நடித்திருக்கிறார். ஶ்ரீகாந்தின் காதலை மறுத்து அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும் படியும், அந்த கதாபாத்திரத்தின் நியாயமான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் ஆகியோரும் ஓகேவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
கோகுலின் ஒளிப்பதிவும், தாஜ்நூரின் பின்னணி இசையும் ஓகே.
‘தி பெட்’ – அய்யோ பாவம்!












