‘டியர் ரதி’ – (விமர்சனம்.) சிலருக்கு மட்டும்!

‘இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ்’ எல் எல் பி & லாக் லைன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், டியர் ரதி. இதில், சரவணா விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், பிரவீண் கே. சின்னத்திரை ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர். அதில் நடித்த, சரவணா விக்ரம். கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். எப்படி இருக்கிறது?
இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ளவர், சரவணா விக்ரம். அதிலும் பெண்கள் என்றால் ஆகவே ஆகாது. ஐடி துறையில் இப்படி ஒரு இளைஞனா? என சகலரும் ஆச்சர்யப்படும் கேரக்டர். இந்த கூச்ச சுபாவத்தினால், பெண்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. இதை போக்குவதற்காக, நண்பனின் ஆலோசணைப்படி, சரவணா விக்ரம் தனது கூச்ச சுபாவத்தை போக்க, பாலியல் தொழிலாளி ஹஸ்லி அமானுடன் ஒரு நாள் டேட்டிங் செல்கிறார். அப்போது, அவர்களை கொல்ல ஒரு கும்பல் திட்டமிடுகிறது. அதிலிருந்து தப்பித்தார்களா? சரவணா விக்ரமின் கூச்ச சுபாவம் என்ன ஆனது? இது தான் இப்படத்தின் கதை.
‘டியர் ரதி’ திரைப்படத்தின் கதை, நான்லீனியர் முறையில் சொல்லப்பட்டிருப்பதால், குழப்பம் ஏற்படுகிறது. நேரடியாகவே சொல்லியிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது.
மதன் கதாபாத்திரத்தில், நாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், ‘பாண்டியன் ஸ்டோர்’ தொலைக்காட்சி தொடர் கொடுத்த அனுபவத்தால், தடுமாற்றமின்றி நடித்திருக்கிறார். ஆனால், நடிப்பில் இன்னும் கொஞ்சம் பக்குவம் பெற வேண்டும். சில இடங்களில், இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில், நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான், ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
பிளாக் காமெடி என்ற பெயரில், காமெடித்தனம் கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன். ‘’அட போங்கப்பா. ஒன்னு வில்லத்தனம் பண்ணுங்க. இல்ல சிரிக்க வைங்க. ரெண்டும் இல்லாம ஏன் படுத்துறீங்க!?’’
அன்புக்கும், காதலுக்கும் இடையேயான வித்தியாசத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர், பாலியல் தொழிலாளிகளுக்கு கௌரவம் சேர்க்க முயற்சித்திருக்கிறார். அதை, அனைவரும் ரசிக்கும் படி அமைத்திருக்கலாம்.
லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவும், எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையும் ஓகே.
‘டியர் ரதி’ – சிலருக்கு மட்டும்!