‘மார்க்’ -(விமர்சனம்.) வெட்டு, குத்து மசாலா!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், மார்க். இதில், கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், ஷைன் டாம் சாக்கோ, தீப்ஷிகா சந்திரன், ரோஷினி ஹரி ப்ரியன், நிஷ்விகா நாயுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், விஜய் கார்த்திகேயா.

‘மார்க்’, இது ஒரு எக்ஸ்ட்ரீம் கமர்ஷியல் என்டர்டெயினர். அதுனால, லாஜிக்கெல்லாம் இதுக்கு தடையில்ல! அத, மனசுல வச்சுட்டு படம் பாக்கணும்! சரி, படத்தை பாக்கலாமா?

சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் எஸ் பி. கிச்சா சுதீப். மது போதையில் இருக்கும் அவரை, பேட்ரோல் போலீசார், விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு கொண்டு வருகின்றனர். அந்த ஸ்டேஷனில், நிழல் உலக தாதாவான நவீன் சந்திராவுக்கு சொந்தமான, சுமார் 2000 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை கைப்பற்ற நவீன் சந்திராவின் அடியாட்கள் ஸ்டேஷனுக்குள் நுழைகின்றனர். அதை முறியடித்து, அந்த போதைப்பொருளை கிச்சா சுதீப் கைப்பற்றுகிறார்.

இதனிடையே, கிச்சா சுதீப்புக்கு தெரிந்த ஒரு குழந்தையுடன் சேர்த்து, பல குழந்தைகள் கடத்தப்படுகிறது. ஷைன் டாம் சாக்கோ, தான் முதலமைச்சராக வருவதை தடுக்கும் ஒருவரை கொலை செய்கிறார். இது ஒரு மொபைல் போனில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த மொபைல் போன் கடத்தப்பட்ட ஒரு குழந்தையிடம் இருக்கிறது. ஷைன் டாம் சாக்கோ, அந்த குழந்தையை கொன்றாவது மொபைலை கைப்பற்ற முயற்சிக்கிறார்.

குழந்தைகளை கடத்தியது யார்? நவீன் சந்திரா, போதை பொருளை கைப்பற்றினாரா? ஷைன் டாம் சாக்கோ முதலமைச்சர் ஆனாரா? கிச்சா சுதீப், குழந்தைகளை காப்பாற்றினாரா? போன்ற பல கேள்விகளுக்கான பதிலை அதிரடி ஆக்‌ஷனில் சொல்லியிருக்கிறார்கள்.

மார்க் திரைப்படத்தை, எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, முதல் காட்சியிலிருந்தே அடிதடி காட்சிகளை ரசிக்கும், ரசிகர்களை கவரும் விதத்தில் படமாக்கியிருக்கிறார். எனவே இது, முழுக்க முழுக்க அடிதடி பிரியர்களுக்கானது. ஒரு சில டிவிஸ்டுகளுடன் திரைக்கதை சுவாரசியமாகத்தான் செல்கிறது. இடைவேளைக்கு பின்னர் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. கிச்சா சுதீப்பின் மாஸ் ஹீரோயிசத்தை, உயர்த்திப்பிடித்திருக்கிறது சண்டைக்காட்சிகள்.

கிச்சா சுதீப், ஆரம்பம் முதல் இறுதிவரை மாஸாக வலம் வருகிறார். அடியாட்களை அடித்து பறக்கவிடுவதில், அவரது ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார். முழுப்படமும் அவரை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது.

வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, கொடூரமான வில்லனாக நடித்து பயமுறுத்துகிறார்.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், காமெடி வில்லன். குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.

விக்ராந்த், நடித்திருக்கும் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், அதில் தன்னை முடிந்தவரை நிலை நிறுத்தியிருக்கிறார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரம் யோகி பாபுவிற்கு. காமெடி பெரிதாக எடுபடவில்லை.

தீப்ஷிகா சந்திரன், ரோஷினி ஹரி ப்ரியன் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

நிஷ்விகா நாயுடுவின் ‘மஸ்த் மலைக்கா’ ஐட்டம் டான்ஸ், சூப்பர். ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரும் ஆடுகிறது!

‘மார்க்’  –  வெட்டு, குத்து மசாலா!