
இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத இலங்கை அரசுகளால் நடத்தப்பட்ட, கொடூரத்தாக்குதல்களை தொடர்ந்து, தமிழீழத் தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பு’ உருவானது. ஆயுதமேந்திய இந்த போராளிகள் அமைப்பு, கொடிய ஆயுதங்கள் கொண்டு தமிழர்களை தாக்கிய, இலங்கை இராணுவத்திடமிருந்தும், சிங்கள காடையர்களிடமிருந்தும் பாதுகாத்து வந்தது. அதைத்தொடர்ந்து,
சிங்கள பேரினவாத இலங்கை அரசின் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த உள்நாட்டுப்போரில், காயமடைந்த விடுதலைப்புலி வீரர்களுக்கு, போர்க்களத்திலேயே மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவ போராளிகள் குழு ஒன்றும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது. அது செயல் பட்ட விதத்தை, சல்லியர்கள் என்ற தலைப்பில் திரைப்படமாக, உருவாகியிருக்கிறார்கள்.
சல்லியர்கள் திரைப்படத்தை ‘இந்தியன் சினிவே’ சார்பில், எஸ் கருணாஸ் மற்றும் பி கரிகாலன் தயாரித்துள்ளனர். எழுதி, இயக்கியிருக்கிறார், தி.கிட்டு. சத்திய தேவி, எஸ் கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சிபி சதாசிவம். இசை, கென் & ஈஸ்வர்.
வல்லரசு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட , நவீன ரக ஆயுதங்களை கொண்டு இலங்கை இராணுவம், விடுதலை புலிகள் மீது பலத்த தாகுதல்களை நடத்தி வந்த போதும், அவர்களால் பெரிதான வெற்றியை பெறமுடியவில்லை. மேலும், தாக்குதலில் காயமடைந்த விடுதலை புலிகளுக்கு களத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் போரில் ஈடுபட்டனர். இதை தடுக்கும் பொருட்டு சல்லியர்களை அழிக்க முடிவு செய்கிறது, இலங்கை இராணுவம்.
இந்நிலையில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் போரில் காயமடைகிறார். அவரை சல்லியர்கள் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அப்போது அவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இலங்கையை சேர்ந்த அந்த இராணுவ வீரரை காப்பாற்ற சல்லியர்கள் போராடுகின்றனர். இது தான் இப்படத்தின் கதை.
மருத்துவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சத்யதேவி. போர்க்களத்தில் பணிபுரிந்த தமிழீழப்போராளியை, தனது சிறந்த நடிப்பின் மூலம் கண்முன் நிறுத்துகிறார்.
அவரைப்போலவே, மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், நடிப்பும், அந்த கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மதிழயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், பேசும் வசனங்கள் அனைத்தும், அம்மக்களின் உணர்வுகளை உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது.
சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும், அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு. அதிலும் திருமுருகன் சிங்களவராகவே காட்சி தருகிறார். மற்றும் நாகராஜ், பிரியலயா போன்றோரும் பொருத்தமான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கும் தி.கிட்டு, உண்மை சம்பவங்களை, பதைப்பதைப்புடனும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு காட்டும் பாரபட்சத்தை மறந்து, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றிய மருத்துவ போராளிக் குழுவினரின் ஈடு இணையற்ற சேவையை வெளி உலகிற்கு காட்டி, அவர்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகள்.
‘சல்லியர்கள்’ – போற்றப்பட வேண்டியவர்கள்!












