
தமிழ்த்திரையுலகில் கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் இரட்டைவேட நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்,’சர்தார்’. இதில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பது தான் இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையாக்கப்பட்டு இருந்தது.
இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்நது இப்படத்தின் 2 ம் பாகம் உருவாகி வந்தது. இதில்,முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகன் கார்த்தியின் பிறந்தநாளில் அவரை சிறப்பிக்கும் விதமாக இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.












