இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகியுள்ள ஜனநாயகன், நடிகர் விஜய்யின் திரைப்பட வாழ்க்கையின் கடைசி படமாகவும், அவர் முழுநேர அரசியலுக்கு சென்ரூ முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், வெளியாகும் முதல் திரைப்படமாகவும் கருதப்படுவதால், தொடக்கத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதலில், இப்படம் 2026 ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளர்கள் அனைத்து நடைமுறைகளையும் முடித்து தணிக்கைக்காக விண்ணப்பித்திருந்த போதிலும், சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆரம்ப ஆய்வுக் குழு யு/ ஏ சான்றிதழுக்கு பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் சில புகார்களின் அடிப்படையில் இப்படத்தை தணிக்கை குழு படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியது. இதையடுத்து படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் உருவான சர்ச்சையை தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சான்றிதழ் வழங்கும் நடைமுறை மீண்டும் தாமதமானது. பின்னர் உச்சநீதிமன்றம், உரிய சட்ட நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, பட தயாரிப்பாளர்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை மறு ஆய்வுக்காக சமர்ப்பித்தனர்.அதன்பிறகு, மறு தணிக்கை குழுவின் திரையிடல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் குழு உறுப்பினர் ஒருவர் உடல்நலக்குறைவால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், ஜனவரி வெளியீடு தவறிய படம், பல மாதங்களாக வெளியாகாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சான்றிதழ் வழங்கும் செயல்முறை முடங்கிக் கிடந்த நிலையில், ஏப்ரல் மாதம் அதன் முழுமையடையாத உயர் வரையறை பதிப்பு இணையத்தில் வெளியான போது, ஜனநாயகன் திரைப்படம் மற்றொரு சர்ச்சையிலும் சிக்கியது.
இப்படத்தை திருட்டு தனமாக இணையத்தில் கசிய விட்ட விவகாரத்தில் , தொடர்ந்து நடத்தப்பட்ட காவல்துறை விசாரணையில், ஒரு சுயாதீன திரைப்படத் தொகுப்பாளர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கிட்டத்தட்ட 7 மாத கால காத்திருப்புக்குப் பின்னர், ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்போது ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதயடுத்து இப்படத்தின் வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமடைந்துள்ளன. படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக இறுதி செய்யப்பட்டுள்ளது.ஏ சான்று காரணமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் படம் பார்க்க அனுமதியில்லை.இந்நிலையில் இப்படம் வெளியீடு குறித்து கேவிஎன் புரொடக்ஷன்ஸின் வர்த்தகத் தலைவரும் தயாரிப்பாளருமான சுப்ரித் மோகன், ‘ஜன நாயகன்’ படத்திற்கு மத்திய நிதி ஆணையம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளவர் “நாங்கள் ஜூலை 24 அன்று திரைப்படத்தை உலகெங்கும் வெளியிடுவோம்,” என்றும் கூறியுள்ளார் அதே சமயம் இப்படத்தின் கனடா விநியோகஸ்தரான யார்க் சினிமாஸ், சமூக வலைதளங்கள் மூலம் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.அந்தப் பதிவில், “. கனடாவில் யார்க் சினிமாஸ் வெளியீடு. ஜூலை 24 முதல் திரையரங்குகளில் ஒளிர்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முழுநேர அரசியல் பயணத்திற்கு முன்பு நடிகரின் கடைசிப் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இப்படம் சுமார் 700 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது.












