சமூக ஊடகங்களில் தங்களது திறமையால் முத்திரை பதித்த இரண்டு பிரபலங்கள் இப்போது வெள்ளித்திரையில் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘ஹிதா ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில், முற்றிலும் மாறுபட்ட காதல் பின்னணியில் உருவாகி வரும் ‘லைட்வெயிட், பேபி!’ திரைப்படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்திய விக்கல்ஸ் விக்ரம், இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாகக் கதாநாயகனாகப் புரமோஷன் பெற்றுள்ளார். நடிப்பதுடன் நின்றுவிடாமல், இப்படத்தின் சுறுசுறுப்பான மற்றும் நகைச்சுவையான வசனங்களையும் அவரே எழுதியுள்ளார்.
அவருக்கு ஜோடியாக, உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ் உலகில் தடம் பதித்த ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஒரு மேடை நகைச்சுவை கலைஞருக்கும், உடற்கட்டமைப்புத் தாரகைக்கும் இடையே உள்ள முற்றிலும் மாறுபட்ட உலகத்தை இந்த போஸ்டர் அழகாகப் பிரதிபலிக்கிறது.
வண்ணமயமான உடற்பயிற்சிக் கூடம் (Gym) தான் இந்தத் திரைப்படத்தின் பிரதானக் களம். வெவ்வேறு லட்சியங்கள், நேர் எதிர் குணங்கள் கொண்ட இருவர் சந்திக்கும் போது ஏற்படும் காதல், ஈகோ மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இப்படம் நகர்கிறது.
இன்று வெளியாகியுள்ள போஸ்டரில், ஜிம் பின்னணியில் விக்கல்ஸ் விக்ரம் தனது டிரேட்மார்க் குறும்புப் பார்வையுடனும், ஆர்த்தி கிருஷ்ணா அவருக்கே உரிய ஃபிட்னஸ் மிடுக்குடனும் காட்சியளிக்கின்றனர். தலைப்பிற்கு ஏற்றவாறு மிகவும் விளையாட்டுத்தனமான எழுத்துகளுடன் இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை விரும்பும் ஒரு ஜாலியான படமாக இது இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் உறுதி செய்கிறது.













