சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.
சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில், ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது,
‘இன்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். என்னை நம்பி இந்தக் கதையை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் ‘#Love’ தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.
நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு அவருக்கு நன்றி. அதேபோல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான். ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.
இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான். ‘#Love’ தொடரின் டிரெய்லரையும், தொடர்ந்து முழுத் தொடரையும் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”
இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது..,
“காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன். ஆண்கள் பெண்களைப் பற்றியும், பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.

காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில், எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காதலை எப்போதும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வைத்திருக்கிறது. அதனால்தான் காதல் கதைகளை தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.
என்னுடைய படைப்புகளைப் பார்த்து ரசிகர்கள் காதல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும், தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.
அந்த வகையில்தான் ‘Love’ தொடரையும் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்”
‘Love’ தொடரின் கதை FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு டேட்டிங் ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். போட்டியாளர்களாக இருக்கும் இருவருக்கிடையே உருவாகும் உறவு, காதல் மற்றும் கருத்து மோதல்கள்தான் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.
டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை பாலாஜி மோகன் எப்படியான அணுகுமுறையில் சொல்லியிருக்கிறார், அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி எப்படி அமைந்திருக்கிறது, கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா… என்ற கேள்விக்கு இந்தத் தொடர் என்ன பதிலைத் தருகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘Love’ வெப் சீரிஸ் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது












