
பாலாவின் தாரை தப்பட்டையின் சத்தம் காது சவ்வையும் ஜிவ்வென்றாக்கி கடும் ‘வலி’யை தந்த காரணத்தால் கொஞ்சம் யோசித்தபடியே நாச்சியார் தரிசனத்திற்கு தயாரானோம் . படத்தின் முதல் காட்சியிலேயே இவானா(அறிமுகம்) கர்ப்பிணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில் நிற்கிறார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவர்களிடமிருந்து காவல்துறை அதிகாரி ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரிக்கிறார்.இதுகுறித்து விசாரிக்கும் போது ரெண்டுங்கெட்டான் வயதில் உள்ள ஜி.வி.பிரகாஷ் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. ஜி.வி.பிரகாஷை கைது செய்யும் ஜோதிகா, அவரை மைனர் ஜெயிலில் சேர்க்கிறார்.பாலியல் கொடுமைக்கு ஆளான இவானாவை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து பாதுகாக்கிறார்.
இப்புகார் தொடர்பாக ஜி.வி.பிரகாஷிடம் நடத்தப்படும் விசாரணையில், ஜி.வி.பிரகாஷ் – இவானா இருவரும் காதலர்கள் என்பது தெரிய வருகிறது.. இந்நிலையில், இவானாவுக்கு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைக்கு உண்மையான தந்தை யார் என கண்டுபிடிக்க ,நடந்த டி.என்.ஏ. பரிசோதனையில்,குழந்தைக்கு தந்தை – ஜி.வி.பிரகாஷ் அல்ல என்றும்,தொடர் விசாரணையில்,அவர் ஒரு அப்பாவி என்ற திடுக்கிடும் உண்மை தெரியவருகிறது. இதையடுத்து கடும் குழப்பத்தில் மூழ்கிய ஜோதிகா,இவானாவை கற்பழித்த காம கொடூரன் யார் என்பது குறித்த புலணாய்வில் இறங்கும் ஜோதிகா, பல இடையூறுகளை சந்திக்க நேரிடுகிறது.அதன் பின் என்ன நடக்கிறது?
கடைசியில் யார் அந்த காம கொடூரன் ? ஜோதிகா அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் சுவாரசியமான மீதிக்கதை.
கதையின் நாயகி ஜோதிகா நேர்மையான கோபக்கார பெண்போலீஸ் ஆபிஸர் நாச்சியார.பெயருக்கேற்ற மிடுக்கு ,தோரணை மிரட்டியிருக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் இதில் நடித்திருக்கிறார்.பாலாவின் கை பக்குவம் அப்படி! . சென்னை இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அறிமுகம் இவானா நம்ப முடிய வில்லை அத்தனை யதார்த்தமாக நடித்துள்ளார். பாலா தனது பாணியில் இருந்து சற்று விலகி வந்துள்ளார்.அதற்காக அவருக்கு சபாஷ் போடலாம்.இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு ஜீவன் ,படத்தின் முதல் பாதி சற்று மெதுவாகவே நகர்கிறது என்றாலும் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு ஓ.கே . படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் தன் பாணியில் இருந்து சற்று விலகி வந்துள்ள பாலாவின் முயற்சிக்கு முதல் வெற்றி என்றே சொல்லலாம். வீரமங்கை நாச்சியார் பெயருக்கேற்ற கம்பீரம்!












