காய்ந்து கிடக்கும் பூமியை கனத்த மழை குளிர்விப்பதைப்போல அனுபவிக்க வேண்டிய படம் ‘தொரட்டி’. எட்டாத உயரத்தில் இருக்கும் இலை,தழைகளை ஆடுகளுக்கு அறுத்துப் போடுவதற்கு பயன்படுத்துகிற நீளமான கம்பு. இதன் முனையில் வளைந்த அருவாளோ குச்சியோ கட்டப்பட்டிருக்கும் .இதன் முக்கியமான சிறப்பு இன்னொன்றும் இருக்கிறது . அதை ஆட்டுக்கிடை போடுகிற மக்களின் பழக்க வழக்கத்துடன் பண்பாடு சார்ந்து சொல்லிருக்கிறார்கள். கி.ராஜநாராயணனின் ‘கிடை’யின் மணம் வாசிப்பதற்கு சுகம். ‘தொரட்டி ‘ பார்ப்பதற்கு சுகம்.
வானம் பார்த்த பூமியில் நடக்கிற கதை.பகட்டு ,பளபளப்பு, அற்ற அட்சரேகையாக ஓடுகிற கிராமம். ஊர் விட்டு ஊர் வந்து உறவினர் உதவியுடன் கிடை போடுகிறார் அழகு. ஸ்டண்ட் கலைஞரான இவரின் முகத்தை சுத்தமாக மாற்றிவிட்டது அவரது கேரக்டர். மகன் மாயன். இவனை உறவினரின் மகள் செம்பொன் காதலிக்கிறாள். மாயனின் சேக்காளிகள் கிடை ஆடு களவாணிகள். கூடா நட்பு.
அவர்களின் வஞ்சகம் தெரியாமல் வலையில் விழும் மாயன் காதலியை கைப் பிடிக்கிறானா ,எப்படி அவர்களிடம் இருந்து மீள்கிறான் என்பது கதை. மீள்வதற்காக அவன் கொடுக்கும் விலை நமது ஆழ்மனதில் உறைந்து போகிற சோகம்!
மன்னர்கள் காலத்தில் வாளுக்கு மாலை சூட்டி மணந்து கொள்வதைப் போல தொரட்டிக்கு மாலை அணிவித்து மருமகள் ஆகிறாள் செம்பொன் .இயக்குநர் மாரிமுத்துவின் வசனமும் காட்சிப்படுத்தலும் சூப்பர். நடிப்பைப் பொருத்தவரை ‘செம்பொன்’ சத்யகலா, ‘மாயன்’ஷமின் மித்ரு இருவரும் வெகு இயல்பாக பொருந்துகிறார்கள்.
களவாணிகளில் செந்தட்டி ,ஈப்புலி,சோத்துமுட்டி மூவரின் முரட்டுத் தனம் சில காமடி என்றாலும் வாய் பேசாத அந்த பரட்டையின் கொடூரம் பேசப்படும்!
குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு வேத சங்கரின் இசை கதை புரிந்து களமாடி இருக்கிறது.