அந்த காலத்து நல்லதங்காள் நாடகமாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி மூக்கைச் சிந்திப் போடாமல் பெண்கள் வர மாட்டார்கள். பெரிசுகள் கவுரவமாக மேல் துண்டில் துடைத்துக் கொண்டு விடும். அந்த நல்லதங்காள் கிணற்றில் தூக்கிப் போட்ட பிள்ளைகளோ என்னவோ ஏழு முதியவர்களைப் பற்றிய கதையைப் படமாக்கி இருக்கிறார்கள் கெ.செவென் ஸ்டுடியோஸ்.
பிரசாத் லேப் தியேட்டரே கொள்ளாத அளவுக்கு கூட்டம் ‘நரை’ திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவுக்கு!
“என்ன கதை?” என்று இயக்குநர் விவி யிடம் கேட்க அவர் ரத்தினச்சுருக்கமாக சொன்னார்.
“வேறு வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் ஏழு முதியவர்களைப் பற்றிய கதை! ஆதரவற்றோர் இல்லம். அடைக்கலம் தருகிறது. சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் நடக்கிற சம்பவம் புரட்டிப்போட்டு விடுகிறது.அந்த சம்பவத்தின் வேர் எது ? எதற்காக இந்த கிழவர்கள் மீது ஆத்திரம். இதையெல்லாம் ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கிறோம்” என்கிறார் விவி.
ஏழு கிழவர்கள் யார் யார் தெரியுமா? சரியான செலக்ஷன்.! சங்கிலி முருகன், சந்தான பாரதி,ஜூனியர் பாலையா, நளினிகாந்த்,அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர்,ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஞானவேல்,துறை சுதாகர், பெருமாள். காசி அனூப் ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.
ரோகித் நாயகன், லிமா, ஈதன் என இரு நாயகிகள்.
ஒளிப்பதிவாளர் சினி சித்தார்த். ‘ஒரு அடார் லவ்’பேமஸ்.
பி.கேசவன்,டாக்டர் ஹேமா சரவணன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.