புகை படிந்த கண்ணாடியில் முகம் பார்க்கிற பழக்கம் நெடுங் காலமாக இருக்கிறது, கோலிவுட்டில்!
பத்ரகாளி என பெயரிட்டதால் விமான விபத்தில் ராணி சந்திரா பலியானார். காளி என பெயரிட்டதால் ரஜினி படத்தில் அக்னி பற்றி எரிந்து பரிகளை வேட்டையாடியது. அதனால் காளி என பெயர் வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் செக்குகளை வெட்டுவதில்லை. இப்படி பல சென்டிமெண்டுகள் அலை அடித்துக் கொண்டிருக்கிறது.. ஏழு எண் வரும்படியாக தலைப்பு வைத்துப் படம் எடுக்க ஸ்ரீதரே பயந்தார். கல்யாணப் பரிசு என்பதில் ‘ப்’ எழுத்தை எடுத்து விட்டுத்தான் போஸ்டர் அடித்தார்,பெயர்ப் பதிவும் அப்படியேதான் அமைந்தது.
ஆனால் விஜய் ஆண்டனி தலை எடுத்ததும் அவரளவில் மூட நம்பிக்கைகள் களை எடுக்கப்பட்டு வருகின்றன.. பிச்சைக்காரன், காளி ,அடுத்து திமிர் பிடிச்சவன், என தலைப்புகளை அடுக்கியவர் அதற்கடுத்து கொலைகாரன் என பெயர் வைத்திருக்கிறார். அதை திரைத்துறை மட்டுமின்றி ரசிகர்களும் வரவேற்கிறார்கள்,
இன்று ( சனிக்கிழமை.) பிரசாத் லேப் தியேட்டரில் ‘காளி’ பட முன்னோட்டச்சுருள், பாடல் காட்சிகள் வெளியிடப்பட்டது.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி தனது பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.கதை சொல்வதற்கு தானே விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியும் ஹீரோ தவிர்த்து வந்தாராம்.
“முதலாவது கதையை என் வீட்டுக்கு வந்து சொன்னவர் அந்த கதை ‘பிடிக்கவில்லை’என்று சொல்லி விட்டார். இன்னொரு கதை இருக்கிறது .கதை சொல்ல வருகிறேன் என்றதும் அவரே வந்து விட்டார் என்வீட்டுக்கு!
அந்த கதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார். அவரது வீட்டுக்குச் சென்று கதை கேட்டால் பிடிக்கவில்லை என்று சொன்னால் கதை சொல்லிகளின் மனசு சங்கடப்படுமே! அதை தவிர்ப்பதற்குத் தான் இப்படியொரு உத்தி என்பது பிறகுதான் தெரிந்தது” என்றதும் அவையில் குபீர் சிரிப்பு.
” ஹீரோவாக நடிப்பவர்கள் வேறு கேரக்டர்களில் நடிப்பதில்லை என கொள்கை வைத்திருப்பார்கள் போல.! அதான் ஆர்.கே.சுரேஷை கூப்பிடுவதற்கு சற்று தயக்கம் .அதிலும் அவரை சின்ன தல என்று வேறு சொல்கிறார்கள்.( ஐயோ ,அது மத்தவங்க சொல்றதுங்க” என்கிறார் சுரேஷ்,) நீண்ட காலமாக இருக்கிற சீனியர்கள் ஈகோ பார்ப்பது தப்பில்லை என்று நம்புகிறேன்.
மற்றொன்று திறமை உள்ள பெண்கள் எத்தனயோ பேர் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருக்கிறார்கள் .அவர்களை முன்னுக்கு கொண்டு வாருங்கள். எனக்கு என் மாமியாரும் அவரும் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்.” என்றார் கிருத்திகா.
விஜய் ஆண்டனி பேசும்போது கிருத்திகாவை விஸ்காம் படிக்கும் போதே தெரியும் என்றார். ஆண்டனியும் விஸ்காம்தானே!
“அவரிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. சில ஹீரோக்களுக்கு சரியாக இருக்கும். கேட்டு நடிக்கலாம். கதையை கேளுங்கள். திறமையான பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடாமல் வெளியுலகம் வந்து விடவேண்டும்.திறமைகளை வெளிப்படுத்துங்கள் .எனக்கு என்மனைவி பட்டு ( பாத்திமா.)வும் அவரது சகோதரி சான்ட்ராவும் உதவியாக இருக்கிறார்கள்.அவர்கள் இல்லையேல் நான் இந்த உயரம் வந்து இருக்க மாட்டேன் “என்கிறார் விஜய் ஆண்டனி.
எத்தனை ஆம்பளைக கேக்கப்போறாய்ங்க!