
தமிழுக்கு முதல் ‘ஸோம்பி’ படம் கொடுத்து நம் கழுத்தைக் கடிக்காமல் விட்ட புண்ணியவான் சக்தி சவுந்தரராஜன் இந்தியாவுக்கே முதல் ‘ஸ்பேஸ்’ படம் கொடுத்திருக்கிறார். வின்சென்ட் அசோகனுக்கு சேரவேண்டிய வாய்ப்பை எப்படியோ தடுத்து முதலில் நிலாவில் கால் வைத்த பெருமையை ஜெயம் ரவிக்கு கொடுத்திருக்கிறார். ஹீரோ ஒர்ஷிப் ரசிகருக்கு இருக்கலாம்,இயக்குநருக்குமா?
நிலம் நோக்கி வரும் விண் எரி கல் விழுந்தால் இந்தியாவின் வரைபடமே மாறிவிடும் பேரபாயம். இதை எப்படி தடுப்பது? சக்தி வாய்ந்த ஏவுகணை யை திருடினால் விண்கல்லை உடைத்து திசை மாற்றிவிடலாம்.அது சீன விண்வெளி ஆய்வு நிலையத்தில்.! சர்வவல்லமை வாய்ந்த இந்தியாவில் அதற்கான ஆள் இல்லாததால் மேஜிக்மேன் கம் ஹேக்கர் ஜெயம் ரவியுடன் அவரது நண்பர்களை பயிற்சி கொடுத்து வின்சென்ட்,நிவேதா பெத்துராஜ் ஆகிய அதிகாரிகளுடன் அனுப்புகிறார்கள். மகன் மேல் உள்ள அளவுகடந்த பாசத்தால் வானுக்கு பறக்கும் ஜெயம் ரவி எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை.
மகனையே நடிக்க வைத்திருப்பதால் தந்தை மகன் பாசத்தில் உருக்கம் மகிழ்ச்சி நிறைவாக இருக்கிறது. ஜெயம்ரவியின் நடிப்பும்தான்! அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவரது கண்ணாடி வித்தைகள் அந்த சீனாக்காரனுக்கு தெரியாமல் போனது சீனாவுக்கே கேவலம்,சரி அவன்தான் நண்பனாக இல்லையே! அர்ஜுன் மறைத்து வைத்திருக்கும் ஹேக்கர் எந்திரத்தைக்கூட அந்த மக்குகளால் கண்டு பிடிக்க முடியவில்லை. இயக்குநரின் ஜாலம் இங்கே தெரிகிறது.
மிகப்பெரிய ராணுவ அதிகாரியான ‘சீப்’ ஜெயபிரகாசுக்கு அப்படி ஒரு தேசத் துரோக ஆசையா? வின்சென்ட்,நிவேதா உள்ளிட்ட மொத்த படப்பிடிப்புக் குழுவுக்கும் உயிர்,மரியாதை கொடுத்திருப்பது ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அண்ட் சி.ஜி. குழுதான். அத்தனை லாஜிக் ஓட்டைகள், திரைக்கதை குழப்பங்கள் இருந்தும் வித்தியாசமான படம் பார்க்கிற உணர்வை கொடுப்பது அவர்கள்தான்!
இமான் இசையில் ‘குறும்பா’ கேட்டுக்கொண்டே இருக்கும் ரகம்.
டிக் டிக் டிக் ..தில்லான முயற்சி.
படம் ஜெயிக்குமா?




