வெட்டிச்செலவுகளை கட் பண்ணி நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துவதைப் பல தயாரிப்பாளர்கள் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். நல்ல காரியம். புதிய பட பூஜை என்றால் டிஜிடல் பேனர் ,கட் அவுட் , வீதியில் இருக்கிற ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் சிறப்பு விருந்தினர்களின் படம் உள்ள பிளக்ஸ் போர்டுகள் என அதகளம் செய்வார்கள். அதெல்லாம் காற்றில் சிக்கி கிழிந்து வாகன ஓட்டிகளை அவஸ்தைக்குள் தள்ளும். இதெல்லாம் இல்லாமல் உருப்படியாக நல்ல காரியம் பண்ணக்கூடாதா?
ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணுஇயக்கத்தில் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு ‘.
இப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார்கோவிலில் போடப்பட்டது. தொடர்ந்து படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் வித்தியாசமானதாக அமைந்து இருந்தது.
விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலிக்க வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி ,சந்தனம் பூசி , குங்குமம் இட்டு ,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி,இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.