
Nviz எண்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் உதீப் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘90 ML’. இதில் நடிகை ஓவியா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் பொம்மு லட்சுமி, மாஸும், ஸ்ரீகோபிகா, மோனிஷா என நான்கு புதுமுக நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் அருண் என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் காமெடி நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.படத்தைப்பற்றி இயக்குநர் அனிதா உதீப் பேசுகையில்,‘ டிராமா, காமெடி,ரொமான்ஸ் இந்த மூன்றும் கலந்த கலவையான ஜேனரில் இந்த படம் உருவாகியிருக்கிறது. கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் இது வரை சொல்லப்படாத ஒரு விசயத்தை மையப்படுத்தியிருக்கிறேன்.

பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலிமையாக பதிவு செய்திருக்கிறேன். அதனை தோழமைக்கே உரிய கலாய்க்கும் வகையிலும், ஜாலியாகவும் திரைக்கதையாக்கியிருக்கிறேன். கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் கதையின் நாயகியாக நடிக்க ஓவியாவை தேர்வு செய்தேன். இந்த படத்தின் கதையை நடிகர் சிலம்பரசன் அவர்களிடம் சொல்லிவிட்டு, நீங்கள் தான் இசையமைக்கவேண்டும் என்று சொன்னேன். இவர் இந்த படத்தின் கதையம்சம் புதுமையாக இருப்பதாகவும், பாடல்கள் இடம்பெறும் சூழல் வித்தியாசமான கற்பனையுடன் இருப்பதாலும், அதற்கு இசையமைப்பது சவாலானதாக இருக்கும் என்று சொல்லிவிட்டு, இசையமைக்க ஒப்புக்கொண்டார். அத்துடன் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் சரியான சமயத்தில் இசையமைத்து கொடுத்ததுடன் இரண்டு பாடல்களையும் பாடி கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலுக்கு கீழே டாக் லைனாக ‘get high on life’ என்று போட்டிருக்கிறோம். பெண்கள் தங்களுடைய உணர்வுகளை மறைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகத்தான் இந்த பெயரை வைத்திருக்கிறோம்.’ என்கிறார்.அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.