சிறுமி தித்யாவை மொத்த படக்குழுவும் நம்பி இருக்கிறது.
முன்னொரு காலத்தில் ‘ஆகச்சிறந்த இயக்குநர்’ வி.சாந்தாராமின் இயக்கத்தில் ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே” என்கிற இந்திப் படம் வெளியாகியது. நடனக்கலைஞர் கோபி கிருஷ்ணா, இயக்குநரின் மனைவி சந்தியா இருவரும் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபீஸ் ஹிட். விருதுகள், பாராட்டுகள் என அகில இந்திய அளவில் குவிந்தன. அத்தகைய நடனச் சிறப்பு,புகழ் பெருமை ‘லக்ஷ்மிக்கும்’ உண்டு.
அம்மா ஐஸ்வர்யா ராஜேஷின் பார்வையை விட்டு விலகி இருக்கும் நேரங்களில் சிறுமி லட்சுமியின்( தித்யா.) கை கால் சும்மா இருப்பதில்லை. ஏதாவது ஒரு ஸ்டெப்ஸ் என இயங்கியபடியே!
அந்த சிறுமியின் நாளங்களில் நடனம் ஓடுகிறது.
இயல்பிலேயே தித்யா சிறந்த நடனக்காரி. பத்து பிரபுதேவாக்கள் அவளுக்குள் அடங்கிக் கிடக்கிறார்கள். இந்த சிறுமியைப் பார்க்கிற பாக்கியம் மைக்கேல் ஜாக்சனுக்கு இல்லாமல் போய்விட்டது.எதிர்வரும் காலத்தில் தித்யா கொண்டை என வந்தால் ஆச்சரியம் இல்லை.
தளபதி விஜய்யையும் இவளையும் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் பண்ணுங்களேன்! அள்ளலாம்!
சென்னை டான்ஸ் பள்ளியில் சேர்ந்து பயின்று அந்த வருடத்தின் இந்தியாவின் பெருமை என்கிற டைட்டிலை இந்திய அளவில் வெல்ல வேண்டும் என்கிற ஆசை. நடக்குமா என்பதைக்கூட தீர்மானிக்க முடியாத வயது. ஆனாலும் நடன ஆர்வம் அவளை கிருஷ்ணா என்கிற பிரபு தேவாவிடம் கொண்டு சேர்க்கிறது. அவரும் அவளைப் போல நடனப் பிரியர்தான்!
அம்மாவுக்குத் தெரியாமல் பயிற்சியில் கலந்து மும்பை வரை செல்கிறாள். அவளது ஆசை நிறைவேறியதா? பிரபுதேவா யார், அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ் தனித்த வாழ்க்கைக்கு என்ன காரணம், இந்திய அளவில் நடத்தப்படுகிற போட்டிகளில் நடுவர்களாக கலந்து கொள்கிறவர்கள் நியாயவான்கள்தானா ? இவையெல்லாம் தெரிய வேண்டுமென்றால் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும்.
சிறுவர்,சிறுமிகளில் மாஸ்டர்களின் முட்டியை சோதிக்கிற அளவுக்குத் திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை படத்தில் படத்தைப் பார்க்கும் போது தெரிகிறது. ” இவ்வளவு குண்டாக இருக்கிறானே மாஸ்டர் அக்சத், அவனால் தொப்பையைத் தூக்கிக்கொண்டு ஆட முடியுமா என்றால் எழுந்து நின்று கை தட்ட வைக்கிறான். என்னா வேகம், எவ்வளவு கடுமையான ஸ்டெப்ஸ். சான்சே இல்லை. மாஸ்டர் ஜீத் தாஸ் என்கிற சிறுவனும் வியப்புக் குறிகளை இமய உயரம் போடுவார்கள் போலிருக்கிறது. பங்கு கொண்ட அத்தனை சிறுவர்களின் ஸ்டெப்ஸ்களையும் எதிர்வரும் படங்களில் முன்னணி நடிகர்கள் முயன்று பார்ப்பார்கள் என்பதற்கு சந்தேகம் இல்லை.
பரேஷ் ஷிரோத்கர், ரூயல்டசன் வரிந்தானி, சம்பா சொந்தாலியா ஆகிய டான்ஸ் மாஸ்டர்களுடன் நமது பிரபுதேவாவும் இணைந்து டான்ஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வெல்டன் மாஸ்டர்ஸ்.! உங்களின் திறமைகளுக்கு நடனம் ஆடிய அரும்புகளே அற்புத சாட்சி.!
ஐஸ்வரியா ராஜேஷின் சொந்த வாழ்க்கையை விரிவுபடுத்தவேண்டும் என்கிற அவசியம் இல்லாமலேயே திரைக்கதை செல்கிறது. இதைப் போலத்தான் பிரபுதேவாவும். இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்த்தினால் போதும் என இயக்குநர் ஏ எல் விஜய் நினைத்திருந்தால் தவறில்லை.
பிற்பாதியில் தித்யாவின் செவித் திறனை பாதிக்கும் அளவுக்கு கொடிய விபத்து அவசியமா? பஸ், வீதி, என வாய்ப்புக் கிடைக்கும் இடமெல்லாம் கூச்சம் இல்லாமல் ஆடக்கூடிய தித்யாவுக்கு சபை கூச்சம் என்பது ஏற்புடையதாக இல்லையே விஜய்.?
சாம்.சி.எஸ்.இசையும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்தினுடைய இரண்டு கண்கள். நடனத்தின் விரைவும் துடிப்பும் வலியும் ஒளிப்பதிவில். வெள்ளைத் தாடிக்காரரின் கேமராவில் மந்திரம் மறைந்திருக்கிறது.அவருக்கு மட்டுமே தெரியும்!
சாம் .சி.எஸ், வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற இசை விருட்சம். முளைத்திருக்கிற கனிகள் எல்லாமே இனிப்பானவை.
லட்சுமியின் தரிசனம் விரும்பாதவர்கள் எவருண்டு?