தூத்துக்குடியைச் சேர்ந்த அந்த மாணவி சோபியாவுக்கு விண்ணிலிருந்து தூத்துக்குடியைப் பார்த்தபோது ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ரத்தம் தெரிந்ததோ என்னவோ , உணர்ச்சி வயப்பட்டு ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்டிருக்கிறாள்.
இதனால் அதே விமானத்தில் பயணப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு குற்றமாகத் தெரிந்திருக்கிறது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சோபியாவை கைது செய்து களித்திருக்கிறார். இதை திமுக தலைவர்,ஸ்டாலின், திரை உலக இயக்குநர்கள் பாரதி ராஜா,வ.கவுதமன் ஆகியோர் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள்.
இதோ பாரதிராஜாவின் கண்ணியமான கண்டனம்.
என் இனிய சகோதரி தமிழிசைக்கு பாசத்துடன் பாரதிராஜா,
நீங்கள் தமிழக பி.ஜே.பி-யில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள்., தேசிய சிந்தனையுடைய இலக்கியவாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
நீங்கள் பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். பல இடங்களில் நான்கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நாம் எதிரி என்று சிலரை நினைப்போம், நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல. கருத்துவேறுபாடு, ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது.
உங்கள் விமானப் பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா தாய் மண்ணை விட்டுப் பிரிந்து வாழ்வியலுக்காகக் கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து புகுந்த மண்ணின் பெருமையும் காத்தவள். தான் பிறந்த மண்ணில் சமீபத்தில் நடந்த தூத்துக்குடிச் சம்பவம் அவளை எவ்வளவு பாதித்திருக்க வேண்டும். அந்த வேதனையில் அந்த உரிமையில் அவர் ஒரு தமிழச்சியாகத் தைரியமிக்க தமிழச்சியாகத் தமிழிசைக்கு எதிராக தைரியமாகக் குரல் கொடுத்திருப்பாள். நீங்க உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி அவளைச் சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?.
அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து செய்து உள்ளே தள்ளவேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான விஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை. நீங்கள் எங்களில் ஒருவராக இல்லாமல் வேறொரு பெண்ணாகவே பார்க்கமுடிகிறுது. மன்னிக்கணும். அந்த பெண்ணைப் பற்றி முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
திமுக.தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பதாவது,
“கருத்து உரிமைக்கு எதிராக தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது .உடனடியாக சோபியாவை விடுதலை செய்ய வேண்டும்.கண்டன முழக்கமிடுபவர்களை கைது செய்வதென்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்.?நானும் சொல்கிறேன் ” பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக””