நாம் அன்றாடம் சாலையில் பண்ணுகிற சில தவறுகளை திடுக், திடுக் திகில் கதையாக மாற்றுவதற்கு மண்டையில் நல்ல மசாலா இருக்கவேண்டும். இயக்குநர் பவன் குமாருக்கு சிறப்பாகவே இருக்கிறது. வேளச்சேரி மேம்பாலத்தில் குறிப்பிட்ட இடத்தில் யூ டர்ன் அடிப்பவர்கள் சொல்லிவைத்தது மாதிரி தற்கொலை பண்ணிக் கொள்வது ஏன்?
இதுதான் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேனின் சந்தேகம். ஆனாலும் இந்த சீரியல் தற்கொலையின் மரணத்தை இன்வெஸ்டிகேஷன் பண்ண வேண்டும் என்கிற ஆர்வம் இல்லாமல் “ஊற்றி மூடுய்யா ” என்கிறார்.
ஆனால் பத்திரிகையாளர் ரட்சனா என்கிற சமந்தா விடுவதாக இல்லை.
அப்படி என்னதான்யா நடக்கிறது?
அங்கதானே சஸ்பென்சை அழுத்தமா வெச்சிருக்கோம்.
மொத்தக் கதையின் வெயிட்டும் சமந்தா மேல்.! அழகான சிரிப்பு. ராகுல் ரவீந்திரன் மீதான காதலை சொல்வதில் கூட நவீனம், நளினம். வேளச்சேரி பாலத்தை பற்றிய தனி ஸ்டோரி கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்.ஆனால் யார் யாரோ சாகிறானே…என்கிற பயம். தன்னையே பலி ஆடாக வைக்கிற துணிகரம்…..சூப்பர் சமந்தா அக்கினேனி.
ராகுல் ரவீந்திரனின் காதல் அணுகுமுறை,பக்கா ஜென்டில்!. வழக்கமான சினிமாத்தனம் இல்லை.
கதையில் சமந்தாவுடன் பெரும்பகுதியை பிடித்திருப்பவர் நாயக் காக வருகிற ஆதிதான்! ஒரு நேர்மையான துணிகரமுள்ள போலீஸ் அதிகாரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்.
திரில்லர் படத்து உரிய எல்லா அம்சங்களும் இருந்தாலும் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அடுத்தடுத்து நிகழும் காட்சிகளால் தெரியாமல் போய் விடுகிறது.
லாக்கப் காட்சியின் கடுமை நம்மை உறைய வைப்பதற்குக் காரணமே ஒளிப்பதிவு (நிக்கேத் பொம்மி ரெட்டி)வும் ,எடிட்டிங் (சுரேஷ் ஆறுமுகம் ) கும் தான்.
பல இடங்களில் டப்பிங் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது.
நமக்கு இருந்த படபடப்பை பூமிகா வந்து நீக்குகிறார்.
குறைந்த நேரம், அடுத்து என்ன நிகழும் என்கிற ஆர்வம். உண்மைச்சம்பவங்கள் ஆதாரம் என்கிறார்கள் .அதனால் அத்தனை உயரத்தில் இருந்து விழுந்தவருக்கு முட்டி கூட உடையவில்லையா என்றெல்லாம் கேட்க முடியவில்லை . படத்தைப் பார்க்கலாம் .