ரங்குஸ்கி என்றால் மங்குஸ்தான் பழம் மாதிரியான ஒரு அயிட்டமாக இருக்கும் என்றுதான் எல்லோருமே நினைப்பார்கள். தொடக்கத்திலேயே பிரபல நாவலாசிரியர் சுஜாதாவை காட்டி விளக்கி விடுவதால் பெயரின் மர்மம் முடிந்து விடுகிறது.
பி.42 என்பது அரியவகை பைபிள்.பலகோடி பெறும். அது கன்யாஸ்திரி மரியாவிடம் (அனுபம் குமார்.) இருக்கிறது. கோடிகளில் விலை போகும் அந்த பொக்கிஷத்தை அடைவதற்கு ரங்குஸ்கி ( சாந்தினி.) பல கொலைகளை செய்கிறாள். அவள்தான் செய்கிறாள் என்பதை மறைத்து அவள் போடுகிற திறமையான நாடகம்தான் முழுக் கதை.
படத்தின் இறுதிக் காட்சியில் மூன்று காரியங்களை செய்யக்கூடாது என்பதாக சொல்வார் கதாநாயகன் மெட்ரோ சிரிஷ். அந்த காரியங்களில் ஒன்று நடிக்கக்கூடாது என்பது, இயக்குநர் தரணிதரன் கதைக்காக எழுதிய வசனத்தை தனக்காக எழுதினார் என்பதாக நினைத்துக் கொண்டார் போல. இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தும் கோட்டை விட்டிருக்கிறார்.கான்ஸ்டபிள் கெத்தாக சல்யூட் கூட அடிக்கத் தெரியவில்லை என்றால் எப்படி?
கதையில் சஸ்பென்ஸ் உத்திகளை திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குநர் தரணிதரன். இன்ஸ்பெக்டர் ஆரோக்கியத்திடம் இருந்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.ஜெயகுமாருக்கு மாற்றப் பட்ட பின்னர் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் ஃபைன். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணியும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
சில நேரமே என்றாலும் அனுபமா குமார் நினைவில் நிற்கிறார்.
திகில் பரப்பவேண்டும் என்பதற்காகவே சில கேரக்டர்கள். போலீஸ் துரத்தும்போது ஒரு அயிட்டம் டான்ஸ் வைப்பது அரதப்பழசாகி விட்டது. மாஸ்டர் ராபர்ட்டுக்காகவா! அவர் கையில் இருக்கும் பச்சையைக் காட்டுவதற்கு இதுவா வழி?
லிப்லாக் என்பது சாதாரணமாகிவிட்டது. அதைக்கூட ‘சீட்டிங்’ பண்ணித்தான் காட்ட வேண்டுமா என்ன? ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் யோசித்திருந்தால் அந்த முத்தக்காட்சியை ஜீவன் உள்ளதாக காட்டி இருக்கலாம்.
ராஜா ரங்குஸ்கி ??????