ஆறுச்சாமி குடும்பத்துக்கும் பெருமாள்சாமி குடும்பத்துக்கும் வழி வழியாக வரும் குடும்பப்பகையின் விளைவுதான் சாமி 2.
இத்தோடு குடும்பப் பகை தீரும் என்று நினைத்தால் தப்பு ! சாமி 3 க்கும் இயக்குநர் ஹரி எய்ம் பண்ணிருக்கிறார். விட மாட்டோம்லே!
சாமி யில் என்ன ஸ்டைலோ, அதே ஸ்டைலில் கொஞ்சம் கூட மாறாமல் ,ஆவேசம் தணியாமல் சாமி 2 விலும் கொந்தளித்திருக்கிறார் சீயான் விக்ரம்.!. பெருமாள் பிச்சையின் வாரிசான ராவண பிச்சை ஆட்களை வதம் செய்கிற காட்சியில் தியேட்டரில் விரிசல்கள் விழும் அளவுக்கு ஆரவாரம் என்றால் அதில் முக்கால்வாசிப் பங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு!
ஹரியின் படம் என்றால் எத்தனை கார்கள்,வேன்கள் நொறுங்கும் ,தீ பிடிக்கும்.குறையே சொல்ல முடியாது.!
சாமி சீயானும் மொளகாப்பொடி ஐஸ்வர்யா ராஜேசும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்க போற நேரத்தில் குத்து வாளாக வருகிறார் ராவணப் பிச்சையான பாபி சிம்ஹா..
சாமி, நிறைமாத ஐஸ்வரியா ராஜேஷ் இருவரையும் கொட்டும் மழையில் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். செத்து அரை மணி நேரம் கழித்து ராமசாமி பிறக்க டெல்லி கணேஷ் அய்யர் தனது குடும்பத்துப் பிள்ளையாக வளர்த்துப் பெரிய ஆளாக்குகிறார். அந்த ராமசாமிதான் ராவணப் பிச்சையின் ஆட்களை துவம்சம் பண்ணுகிற சாமி 2.
இந்த ராமசாமிக்கும் டெல்லி மந்திரி பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கும்தான் காதல்.ஆங்காங்கே பசுமை! சாமி மாதிரி ஊடலும் கூடலும் சில சீன்கள் வைத்திருக்கலாம்.
நெல்லையை மட்டுமே சுற்றிக் கொண்டிராமல் தனது எல்லையை டில்லி வரை விரிவுபடுத்தி இருக்கிறார். வித்தியாசமாக இருக்கிறது. விக்ரம், கீர்த்தி இடையேயான காதல் முறைப்பும் விறைப்புமாக இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
வேறுபட்ட லொக்கேஷன்கள். வெங்கடேஷ் அங்குராஜின் ஒளிப்பதிவில் மயங்க முடிகிறது.மிரள முடிகிறது. பூகம்ப படங்களுக்கு இவரது பொன்னான கரங்கள் கை கொடுக்கும். பாலைவனக் காட்சி செம மிரட்டல்.!
பிரபு கேரக்டருக்கு கச்சிதம் அளவு மீறாமல் !
வரவர சூரியின் காமடி எரிச்சலின் எல்லை தாண்டிக் கொண்டிருக்கிறது. படமாக்கும்போதே இது சொரியல் என்பது யூனிட்டில் உள்ள ஒருத்தருக்கும் தெரியாமல் போனதா?
ராவணப் பிச்சை வழியாக மந்திரிகள், அதிகாரிகளின் லஞ்சப் பணம் நாடு கடத்தப்படுவதை ஹரி இன்னும் சற்று அழுத்தம் கொடுத்து காட்சிகளை வேறு படுத்தி இருக்கலாம்.
சும்மாவே மிரட்டுகிற பாபி சிம்ஹாவை பயமுறுத்த வைத்திருக்கிறார்கள் அவர் எக்ஸ்ட்ரா எனர்ஜி போட்டிருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
ஓ.ஏ.கே. சுந்தர், முழியழகர் ஜான் விஜய் இவர்களது கேரக்டர்கள் படத்தின் நீளத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது.
இவ்வளவு பாடல்களா….? இசை அமைப்பாளர் டி.எஸ்.பி.யின் மெட்டுக்கள் பரவாயில்லை.
புது வீடு கட்டி குடித்தனம் போக வேண்டிய ஹரி தனக்கு ராசியான வீடு என்று சொல்லி பழைய வீட்டிலேயே இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கான களம் விரிந்து பரந்திருக்கிறது.
வாருங்கள் வரவேற்கிறோம்.