“மெல்லத் தமிழ் இனி சாகும்.”
“செத்தா சாகட்டும்…உனக்கென்ன வந்துச்சு. மூடிட்டு மூலையில் உட்காரு…தட்டிக்கேட்கிற மனுசன் கலைஞரே போயிட்டாரு. …அது சரி இப்ப எதுக்காக பொங்குறே?”
“ஆளப்போறான் தமிழன்’னு ஒரு உணர்ச்சிகரமான பாட்டை கொடுத்த விவேக் என்கிற கவிஞர் இப்ப ‘சிம்டாங்காரன்’னு ஒரு பாட்டு எழுதி இருக்காரு. ஏஆர்.ரகுமான் மியூசிக் போட்டிருக்கார். பாட்டுல ஒரு வரி ரெண்டு வரின்னா பரவாயில்ல, முழுப்பாடலும் புரியாம இருக்கு. கேட்டா அது தமிழ்தான். சென்னைத் தமிழ்னு விவேக் சொல்றார். சிம்டாங்காரன்னா துடிப்பானவன்,கவர்ந்து இழுப்பவன்னு அர்த்தமாம். நானும் தேடாத அகராதி இல்ல.சிம்டாங்காரனுக்கு மட்டுமில்ல ,முக்கால்வாசி பாட்டுக்கு அர்த்தம் அகராதியில் இல்ல.
விஜய் படம்னா சின்ன பசங்களுக்கு பிடிக்கும். பொருள் இல்லாத இந்த பாட்டை மனசில வேடிக்கையா பதிய வச்சுக்குவாங்க. அவங்களுக்கு விஜய் பாட்டு என்பதால் பிடிக்குமே தவிர பாட்டு வரிகளுக்காக இல்ல. தயாரிப்பாளருக்கும் தமிழைக் காக்கனும்கிற அவசியம்லாம் இல்லை.!”
“இனிமேல் தமிழ்,இனம் என்றல்லாம் பேசிப்பயனில்ல. அது எலக்சனுக்கு மட்டும்தான் பயன்படும்.! ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானான்னு அமரதீபம் படத்தில் ஒரு பாட்டு. பத்மினியும் ஈவி சரோஜாவும் பாடி ஆடுவாங்க. அப்ப இந்த பாட்டுக்கு எதிர்ப்பு வந்துச்சு. தஞ்சை ராமையாதாஸ் “இது ஜிப்சி –நாடோடிகள் கூட்டப் பாட்டு.அப்படிதான் இருக்கும். நரிக்குறவர்கள் பேசுறது மாதிரின்னு வச்சுக்குங்கன்னு சொல்லிட்டார். கலைவாணர் என்.எஸ்.கே.யும் சந்திரலேகா படத்தில் ஜிப்சி கூட்டப் பாட்டுப் போட்டிருப்பாரு.’ஐய்லோ பகடியாம்மா ‘ன்னு. அது நாடோடி கூட்டத்துக்கான பாட்டு. அந்த படத்தில அப்படி ஒரு வேஷம் இருந்துச்சு. இதில தளபதி விஜய் தமிழை குதறுகிற அளவுக்கு அப்படி என்ன அவசியம்? “
“இதே ரகுமான்தான் ‘அக்கடான்னு’ ‘முக்காலா முக்காபுலா ‘ன்னு தொடங்குற பாட்டுகள் வேணும்னு கவிஞர் வைர முத்துவிடம் கேட்டபோது . ‘எழுத மாட்டேன்’னுட்டார் கவிஞர் ,அப்புறம்தான் அந்த இடத்துக்கு கவிஞர் வாலி வந்தார். ரகுமானையும் ஒரே அடியா குற்றம் சொல்லி விட முடியாது.
சிவாஜியில் ஆம்பல் ஆம்பல் னு பாட்டு வரும் .குறுந்தொகையில் இருந்து கவிஞர் வைரமுத்து எடுத்ததுதான் ஆம்பல். இதுக்கு நீலத்தாமரைன்னு அர்த்தம். இருவர் படத்தில் ‘நறுமுகையே ‘ன்னு ஒரு பாட்டு.நறுமணம் மிகுந்த மேகம் போன்ற கூந்தல்னு பொருள். மவ்வல்னு ஒரு வார்த்தையை போட்டிருப்பார் கவிஞர். முல்லை,தாமரை,மல்லி என பலபொருள். “
“எனக்கும் நினைவு இருக்கு. பெம்மானே, வெய்யோனே,என்புருகி, யாக்கை திரி,நித்திலமே என எத்தனையோ இலக்கிய சொற்களை கவிஞர் வைரமுத்து பயன் படுத்தி இருக்கிறார். இதே ஏஆர்ரகுமான் தான் இசை. ஆனால் இயக்கம் மட்டும் மணிரத்னம்,ஷங்கர் .தனிரகம் ஏஆர் முருகதாஸ் “
“பல்டி பாக்குற,தர்ல வுடனும்,பிஸ்து ,பல்து இதெல்லாம் சென்னைத் தமிழ்னு விவேக் சொல்றார். காலத்தை நொந்துகிறத விட வேறென்ன செய்ய முடியும்? தமிழன்டா விஜய்யே உடந்தையா இருந்திருக்கிறார் ..நாடு எக்கேடு கெட்டா என்ன?தமிழுக்கு சிறப்புன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம்.”