
நினைவுகளைத் தொகுக்கும்போது பல நேரங்களில் “எழுதலாமா,கூடாதா ” என அனிச்சையாக கை பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடும்!
“சொல்லாதே.!அதனால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது. ,அதிலும் உனக்கு நெருக்கமானவரை புண் படுத்தப்போகிறாய், தேவைதானா?”
இதனாலேயே நான் இதுநாள்வரை எழுதாமலேயே தவிர்த்தேன்.
“கோடிட்டுக் காட்டு!அதனால் உனக்கும் அவருக்கும் முட்டிக்கொள்ளப்போவதில்லை!” என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டுதான் எழுதுகிறேன்.
சிவாஜி கணேசன் கொடி ஏற்றச்சென்றபோது அவரை தடுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்தான். அவர்கள் பாரமலை என்கிற பிரமுகரின் ஆதரவாளர்கள்.
பாரமலை அன்றைய மதுரை மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவரான ப.நெடுமாறனின் ஆதரவாளர்.
உலகத்தமிழினத் தலைவரான வே.பிரபாகரனின் அன்பு, நெருக்கத்தைப் பின்னாளில் பெற்றிருந்தவர்தான் சகோதரர் ப.நெடுமாறன்.
பெருந்தலைவர் காமராஜரின் பேரன்புக்கு உரிய தலைவராக இருந்தார் .
காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்து துணிந்து நின்றதால் பெருந்தலைவர் “அவன் மாவீரன் .மன்னிப்புக் கேட்க மாட்டான்” என நெடுமாறனை உச்சி முகர்ந்தார்.
இதனால் அவரை மாவீரன் என காங்கிரசார் கொண்டாடினார்கள். அன்று இவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் தஞ்சை ராமமூர்த்தியும் ஒருவர். சிறந்த பேச்சாளர்.
மதுரையே நடுங்கும் அளவுக்கு தேசிய மாணவர் மாநாடு நடத்தியவர் நெடுமாறன்.
காங்கிரசின் வரலாற்றில் மறக்கப்படாத மாணவர் மாநாடு அது.
மாணவர்கள் என்றால் அவர்கள் திமுக.வாகத்தான் இருப்பார்கள் என்கிற எண்ணத்தை மாற்றி அமைத்த மாநில மாநாடு!
நெடுமாறனுக்கும் எனக்குமான நட்பு எங்கிருந்து தொடங்கியது?
சொல்லின் செல்வர் ஈவேகி சம்பத்தின் தமிழ்த் தேசியக்கட்சியில் இருந்தபோது நான் தமிழ்நாடு நாளிதழில் செய்தியாளராக இருந்தேன்.
எஸ்.டி.ராய் செய்தி ஆசிரியராக இருந்தார்.ஜேபி என்பவர் துணை ஆசிரியராக இருந்தார்.
தனித் தமிழில் செய்திகளைத் தரவேண்டும் என்பதற்காகவே ஆலை அரசர் கருமுத்து. தியாகராச செட்டியார் தொடங்கிய நாளேடு.ஆசிரியர் அவரது புதல்வர் தி.மாணிக்கவாசகம் செட்டியார் .
பொருளாதார நெருக்கடியால் நாளேடு நிறுத்தப்பட்டது. பணியாற்றிய நாங்களும் பாதிக்கப்பட்டோம்.
“சென்னைக்கு போங்க. சம்பத்த பாருங்க.பணியில் சேருங்க ”
நான் முதன்முதலாக சென்னையில் பணிக்கு சேர்ந்த முதல் அனுபவம்.
நெடுமாறன் காட்டிய திசையில் எங்கள் இருவரின் பயணம் தொடங்கியது.
குறிஞ்சியில் எனக்கு அரசியல் கட்டுரை எழுதிய பழக்கம் சம்பத் அண்ணனின் ‘ஜெயபேரிகை’யில் எழுதுவதற்கு பேருதவியாக இருந்தது.
தமிழ்த் தேசிய கட்சியை காங்.பேரியக்கத்துடன் இணைத்து விட்டதால் எங்களுக்கு முழு நேர அரசியல் எதிரியாக தி.மு.க.இருந்தது.
அரசியல். சட்டப்பேரவை,சினிமா இவைகள் எனக்கு.!
ரண்டால்ஸ் சாலையில் மிகப்பெரிய மாளிகையில் ஜெயபேரிகை இயங்கியது.
அதுநாள் வரை ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஜேபி. இவர் திருவாரூர்க்காரர்.
அந்த காலத்தில் முரசொலியில் இருந்து மாலையில் ‘மறவன் மடல்’ என்கிற ஏடு வந்து கொண்டிருந்தது. அடியார்தான் அதில் எழுதி கொண்டிருந்தார்.அவரது கருத்துகளுக்கு நாங்கள் கடுமையான விமர்சனங்களை எழுதுவோம்.குறவன் குடல் என கிண்டல் செய்வோம்.ஆனால் மாலையில் நான்,அடியார்,நாத்திகம் பாலன் ஆகிய மூவரும் எங்காவது ஒரு இடத்தில் மதுவின் பிடியில்.!
எங்களுக்கு அ.ச.நடராசன் என்கிற வழக்குரைஞர் உதவியாக இருந்தார்.
நாளடைவில் அந்த மாளிகையின் மாடிக்கு சம்பத் அண்ணன் குடும்பத்துடன் குடியேறிவிட்டார்.
பிளாட் பெட் அச்சு எந்திரம்.கடனுக்கு பேப்பர் வாங்கி அன்றாடம் அச்சுக்குப் போனது பத்திரிக்கை.நல்ல சர்குலேசன்.ஆபீசின் நிர்வாகம் அண்ணி சுலோச்சனாவின் கையில்.!
இருந்தாலும் சம்பளம் சரியாக கிடைக்காது. தவறு எங்கே இருந்தது என்பது அண்ணன் சம்பத்துக்கு தெரியும்.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் முழுமையான பேச்சாளராக இருந்ததால் சுற்றுப் பயணத்திலேயே இருப்பார்.
எத்தனை நாள் பசி பட்டினியில் இருந்திருப்பேன்? அவ்வளவு கஷ்டத்திலும் சென்னையில் இருக்க வேண்டுமா?
ஆனால் ஜெயபேரிகையில் பணியாற்றிய காலத்தில் என்னால் மறக்க முடியாத சோக நிகழ்ச்சி எதுவாக இருந்தது என்றால்….
பேரறிஞர் அண்ணாவின் மரணச்செய்தியை கொடுத்ததுதான்!
இரவு பகலாக கேன்சர் மருத்துவமனையில் காத்திருந்ததும் அண்ணா மறைந்தார் என்கிற பேரிடியை அண்ணன் சம்பத்துக்கு சொன்னதும்தான்!
அதன் பின்னர் பசிக்கொடுமையைத் தாங்க இயலவில்லை.ஒரு நல்ல நாள் பார்த்து ஜெயபேரிகையை அண்ணியார் இழுத்து மூடினார்கள்.
பேக் டு பெவிலியனாக மதுரை திரும்பியது ,மதுரை மாலை முரசில் சேர்ந்தது…
இனிதான் பல நிகழ்வுகள்.! சொல்கிறேன்.நாளை மறுநாள்.
இசைஞானியை சந்தித்த அனுபவத்தை!